''மாலத் தீவு நிலைமை குறித்து உன்னிப்பாக கவனிக்கிறோம்''- இந்தியா

மொஹம்மத் நஷீத் படத்தின் காப்புரிமை AFP/getty

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மாலத் தீவு மக்களின் அரசமைப்பு அதிகாரங்களை ரத்து செய்து அவசர நிலையை மாலத் தீவு அரசு பிரகடனம் செய்துள்ளதால் நாங்கள் தொந்தரவு அடைந்துள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல்வாதிகள் கைதுகள் கவலை தருகின்றன. எங்கள் அரசு தொடர்ந்து உன்னிப்புடன் மாலத் தீவுகள் நிலையை கவனித்துவருகிறது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக அரசியல் நெருக்கடிகளால் சிக்கித்தவிக்கும் மாலத் தீவுகளில் மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என மாலத் தீவுகளின் முன்னாள் அதிபர் மொஹம்மத் நஷீத் அழைப்பு விடுத்தார்.

இந்தியா மாலத் தீவுகளில் சிறை வைக்கப்பட்டவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு தலைவர்களின் நிதி பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா தடை போடவேண்டும் எனவும் நஷீத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி கருத்து வேறுபாடு கொண்ட அரசியல்வாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்ததையடுத்து கொந்தளிப்பு தொடங்கியது. போராட்டங்கள் வெடித்தது.

''நாம் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்'' என நஷீத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு அவசர நிலையை அறிவித்தது மட்டுமின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கைது செய்துள்ளது. கைது செய்ததற்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் சொல்லப்படவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

அரசின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்துள்ளன. அமெரிக்கா இந்நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதேவேளையில் அதிபர் யாமீன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி பேசுகையில் நீதிபதிகள் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்றார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்கள் மாலத் தீவுகளுக்கு அவசியமின்றி சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளன.

முன்னாள் அதிபர் என்ன உதவி கேட்டார்?

ட்விட்டரில் நஷீத் எழுதுகையில் இந்திய அரசு ராணுவத்தோடு ஒரு தூதரை அனுப்பி அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கைதுகள் அரசியல் நெருக்கடிகளை மேலும் சிக்கலுக்குளாக்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

''மாலத் தீவுகளின் மக்களின் சார்பாக எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால்'' எனத் துவங்கும் அந்த ட்வீட்டில் ''நாங்கள் இந்தியாவிடம் இருந்து இங்கே மனித இருப்பை கோருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

மேலும் அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத் தீவுகளின் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளையும் அமெரிக்க அரசு முடக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .

ஓர் அறிக்கையில் '' அதிபர் யாமீன் சட்டத்துக்கு புறம்பான நிலையில் ராணுவ ஆட்சியை அறிவித்து வரம்பு மீறியுள்ளார் . அவரை நாம் பதவியில் இருந்து நீக்கவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்