குளிர்கால ஒலிம்பிக்: தென் கொரியா செல்கிறார் கிம் ஜாங்-உன் தங்கை

வெள்ளிக்கிழமை பியோங்சாங்கில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் கலந்து கொள்கிறார். இத்தகவலை தென் கொரிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை KCNA

கடந்த ஆண்டு கட்சியின் போலிட்பீரோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் தான் தென்கொரியா செல்லும் முதல் கிம் குடும்ப உறுப்பினர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வது இருதரப்பு உறவுகளில் நிலவும் பதற்றத்தைத் தனிக்கும் என்று கருதப்படுகிறது.

இரு கொரிய நாடுகளும் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு கொடியின் கீழ் அணி வகுத்துச் செல்லும்.

இருப்பினும், இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வட கொரியா பரப்புரை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கிம் யோ-ஜாங் யார்?

1987ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் கிம் யோ-ஜாங், மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளும், கிம் ஜாங்-உன்னின் சகோதரியும் ஆவார்.

கிம் ஜாங்-உன்னை விட 4 ஆண்டுகள் இளையவரான இவர், தன்னுடைய சகோதரருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இவர், கட்சியின் சக்தி வாய்ந்த செயலரின் மகனான சேயே ரொங்-ஹெ-வை திருமணம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பரப்புரைத் துறையில் தான் ஆற்றிவரும் பணிகளின் வழியாக தன்னுடைய சகோதரரின் பிம்பத்தை பாதுகாக்கின்ற முக்கிய பணிகளால், சமீபத்திய ஆண்டுகளில் கிம் யோ-ஜாங் அவ்வப்போது பொது மக்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இருக்கும் தொடர்புகள் காரணமாக இவரும் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அரிய பயணம்

கிம் வம்சத்தை சேர்ந்த நேரடி உறுப்பினர் ஒருவரின் முதல் பயணமாக கிம் யோ-ஜாங் மேற்கொள்ளும் தென் கொரிய பயணம் அமையும்.

கிம் ஜாங்-உன்னின் மாமாவும், கிம் ஜாங்-இல்லின் மைத்துனருமான சாங் சொங்-தியேக் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தாலும், இவர் மிக முக்கியமாக கருதப்படும் பாயக்து குடும்பக் கிளையை சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணம் கிம் யோ-ஜாங் அதிக அதிகாரத்தை பெற்று வருவதை காட்டுகிறது என்று தென் கொரியாவில் அனுமானங்கள் நிலவுகின்றன.

இப்பயணத்தின்போது, தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னை இவர் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், தன்னுடைய சகோதரனிடம் இருந்து கடிதம் ஒன்றை தென் கொரிய அதிபருக்கு கொண்டு வரலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கிம் யோ-ஜாங் கலந்து கொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: