பிரிட்டன் ஆதிகுடிகளின் நிறம் கருப்பு- ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு

  • பால் ரின்கன்
  • அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணைய தளம்.

பிரிட்டனின் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகுடிகளான 'பிரிட்டன்' மக்களின் நிறம் கருப்பு என்றும், அவர்களது விழிகள் நீல நிறத்தில் இருந்தன என்றும் கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.

1903 ஆம் ஆண்டு கண்டுடெடுக்கப்பட்ட, பிரிட்டனின் பழமையான எலும்புகூடான, செட்டர் இன மனிதனின் எலும்புக்கூட்டை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியது லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம்.

பின், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் இதனை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் முக வடிவத்தை மீட்டெடுத்தார்கள்.

ஐரோப்பியர்களின் தற்போதைய வெள்ளை நிறத் தோற்றப்பாடு ஒப்பீட்டளவில் சமீபத்தியதுதான் என்கிறது இந்த ஆய்வு.

வரலாற்று காலத்திற்கு முந்தைய பிரிட்டானியர்களின் மரபணுவை இதற்கு முன் இதுபோல பகுப்பாய்வு செய்ததில்லை.

பனி யுகத்திற்கு பின், பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த மக்கள் குறித்து தெளிவான புரிதலை வழங்குகிறது இந்த ஆய்வு.

115 ஆண்டுகளுக்கு முன்னால்

இங்கிலாந்தின் செட்டார் பள்ளதாக்கு பகுதியில் உள்ள கெள குகையில் 115 ஆண்டுகளுக்கு முன்பு செட்டார் மனிதனின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அதை சோதனைக்கு உட்படுத்தியதில், இப்போதைய பிரிட்டன் வாசிகளைவிட அந்த மனிதன் உயரம் குறைவாக இருந்து இருக்கிறார் என்றும் அவருடைய உயரம் 5 அடி 5 அங்குலம்தான் என்றும், அவர் 20 வயதில் இறந்திருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மனித குல தோற்றத்தை ஆய்வு செய்யும், அருங்காட்சியகத்தின் ஆய்வு தலைவர் பேராசிரியர் கிரிஸ் ஸ்டிரிங்கர், "இந்த செட்டர் மனிதரின் எலும்பு கூட்டினை கடந்த 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன்" என்கிறார்.

இப்போது இந்த ஆய்வு முடிவு சொல்லும் விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை கூட செய்து பார்த்து இருக்க மாட்டோம் என்கிறார் அவர்.

அந்த எலும்புகூட்டின் மண்டை ஓட்டினை ஆய்வு செய்ததில், அதில் ஏகப்பட்ட முறிவுகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதாவது அந்த மனிதர் மிக மோசமான வன்முறை தாக்குதலால் இறந்திருக்கலாம். அவர் எப்படி அந்த குகைக்குள் வந்தார் என்று தெரியவில்லை, சக பழங்குடிகள் அவரது உடலை அங்கு போட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கருப்பு தோல், நீல விழிகள்

கற்கால பிரிட்டானியர்கள் கருமையான, வழக்கத்தைவிட அதிகம் சுருண்ட முடிகளை கொண்டிருந்துள்ளனர். அவர்களின் விழி நீல நிறத்திலும், அவர்களின் தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

இது இப்போது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். ஆனால், அந்த காலத்தில் இதுதான் வடக்கு ஐரோப்பியர்களின் தோற்றமாக இருந்திருக்கிறது.

புதைபடிவங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற டச்சு கலைஞர்களான அல்ஃபோன்ஸும், கென்னிசும், இந்த ஆய்வு முடிவுகளை கொண்டு, அந்த எலும்புகூட்டின் மண்டை ஓட்டை அளவெடுத்து, அதற்கு ஒரு முக வடிவம் கொடுத்தனர். அதன் வடிவம் ஆச்சரியப்படத்தக்கவகையில் இருந்தது.

வெளிர் நிற மக்கள்

இப்போது இருக்கும் வெளிர் நிறம், மத்திய கிழக்கிலிருந்து பிரிட்டனுக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த மக்களினால் வந்திருக்கலாம்.

எப்படி விவசாயிகள் வெளிர் நிறமாக பரிணாமம் அடைந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது, வைட்டமின் டி குறைபாட்டினால் அவர்கள் வெள்ளை நிறத்திற்கு மாறி இருக்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: