சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்

உங்கள் விருப்பம் இல்லாமல் உங்கள் உடலின் ஒரு பகுதியை ஒருவர் வெட்டினால் எப்படி இருக்கும்? அதை எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் இது நடக்கிறது. புனேவைச் சேர்ந்த நிஷ்ரின் சைஃப், பெண் உறுப்பு சிதைப்பு சடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

"அப்போது எனக்கு ஏழு வயது. எதுவும் எனக்கு சரியாக நினைவில்லை. அந்த சம்பவத்தின் மங்கிய காட்சிகள் மட்டுமே என் நினைவில் உள்ளன," என்கிறார் நிஷ்ரின்.

"பல பெண்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த சிறிய அறைக்குள் என் அம்மா என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர் என் உள்ளாடையைக் கழட்டினார்," என்று பிபிசியிடம் கூறினார் நிஷ்ரின்.

"அப்போது எனக்கு பெரிதாக வலி ஒன்றும் இல்லை. வெறும் ஊசியை வைத்து குத்தியது போலவே இருந்தது. பின்னர் வலியைத் தாங்க முடியவில்லை. என்னால் அடுத்த சில நாட்கள் சிறுநீர் கழிக்கவே முடியவில்லை," என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிக்கும் படம் மட்டுமே

வளர்ந்த பின்னர் தனக்கு நடந்ததை சகித்துக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டார் நிஷ்ரின்.

இந்தியாவில் பெண் உறுப்பு சிதைப்பு வழக்கம்

வழக்கமாக ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பில் உள்ள தோல் அகற்றப்படும். எனினும் பல நாடுகளில் பெண்களுக்கும் இந்த வலி மிகுந்த சடங்கு செய்யப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிக்கும் படம் மட்டுமே

இந்தியாவும் அந்தப் பட்டியலில் அடக்கம். போரா இஸ்லாமிய (தாவூதி போரா மற்றும் சுலைமான் போரா) குழுவினரிடையே இது சாதாரணமாக நடக்கிறது.

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள அவர்கள் மிகவும் வளமான, கல்வியறிவு மிக்க சமூகத்தினர் ஆவர்.

போரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் நிஷ்ரின் இந்த சடங்குக்கு ஆளானார்.

பெண் உறுப்பு சிதைப்பு என்றால் என்ன?

இந்த சடங்கு 'காஃப்டா' என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. போரா இஸ்லாமியக் குழுவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு 6-7 வயது இருக்கும்போதே பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு மயக்க மருந்துகூட கொடுக்கப்படாது. தாங்க முடியாத அந்த வலியைப் பொறுத்துக்கொள்வதையும், வலியால் துடிப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

வழக்கமாக பிளேடுகள் அல்லது கத்தி இதற்கு பயன்படுத்தப்படும். சடங்கு முடிந்த பிறகு வலியைக் குறைப்பதற்காக மஞ்சள், வெந்நீர் அல்லது களிம்புகள் பயன்படுத்தப்படும்.

பெண் குறிக் காம்பு போரா சமூகத்தால் தடைசெய்யப்பட்ட 'ஹரம் கி பூட்டி' என்று கூறப்படுகிறது என்கிறார் போரா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இன்சானியா தாரிவாலா. பெண்களின் உடலில் அதன் இருப்பு அவர்களது பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

"பெண் உறுப்பு சிதைப்பால் பெண்கள் திருமணத்துக்கு முன்பு பாலுறவுகொள்ள மாட்டார்கள்," என்று நம்புகிறார்கள் என்கிறார் இன்சானியா.

ஏமாற்றி உறுப்பு சிதைக்கப்படும் சிறுமிகள்

இன்சானியாவை இந்தச் சடங்கில் இருந்து அவரது அம்மா காப்பாற்றிவிட்டார். ஆனால், திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வதாக ஓர் அரைக்குள் ஏமாற்றி அழைத்துச் சென்று, இன்சானியாவின் மூத்த சகோதரிக்கு இந்த சடங்கை நிறைவேற்றிவிட்டார் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்.

"என் அம்மா எனக்கு சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் குடும்பத்தில் பலருக்கும் அவர் மீது கோபம் இருந்தது. என் சகோதரியின் வலியை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான், அதற்கு எதிராக நான் போராடுகிறேன்," என்கிறார் இன்சானியா.

நாற்பது வயதாகும் நிஷ்ரின் தனது மகள்களுக்கு இந்த கொடிய சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிறார். "இது ஒரு குழந்தைகள் மீதான வன்கொடுமை," என்கிறார் அவர்.

உடல் தூய்மையைப் பராமரிக்க பெண் உறுப்பு சிதைக்கப்படுவதாக நிஷ்ரினிடம் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் இச்சடங்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்பதை பின்னர் அவர் புரிந்துகொண்டார்.

படத்தின் காப்புரிமை Masooma Ranalvi/Facebook
Image caption மசூமா ரானால்வி

"இச்சடங்கிற்கான காரணங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறார்கள். முதலில் தூய்மைக்காக என்றார்கள், பின்னர் பாலுணர்வைக் கட்டுப்படுத்த என்றார்கள். இப்போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் பாலுணர்வை அதிகரிக்கவே இது செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள் ," என்கிறார் இன்சானியா.

"அது பாலுணர்வை அதிகரிக்கவே செய்யப்படுகிறது என்றால், ஏழு வயது சிறுமிக்கு செய்வதன்மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்," என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

பெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக இந்தியாவில் பிரசாரம் செய்துவரும் மசூமா ரானால்வி, மேற்கண்ட கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் பெண்களின் உடல் நலத்தில் அது மோசமான தாக்கத்தையே செலுத்துகிறது என்றும் கூறுகிறார்.

"இது பெண்கள் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலத்தையும் பாதிக்கிறது. இது பின்னாளில் அவர்கள் பாலுறவின் மூலம் மகிழ்ச்சி அடைவதையும் தடுக்கிறது," என்கிறார் மசூமா.

'சாஹியோ', 'வி ஸ்பீக் அவுட்' உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவில் இதற்கு எதிராக போராடி வருகின்றன.

ஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஏற்கனவே இதை ஒரு குற்றமாக அறிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் ஏன் தடை இல்லை?

சமீபத்தில் இந்த சடங்கைத் தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதற்கு, "பெண் உறுப்பு சிதைப்பு நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால் அரசு இந்த நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது," என்று அமைச்சகம் பதில் அளித்தது.

"பெண் உறுப்பு சிதைப்பை ஒரு குற்றமாகவே கருதாத நாட்டில் எப்படி அதற்கான குற்ற ஆவணங்கள் இருக்க முடியும்," என்று கேட்கிறார் மசூமா.

படத்தின் காப்புரிமை Getty Images

"என்னவென்றே அறியாத மிகவும் இளம் வயதில் அவர்கள் எப்படி காவல்துறையிடம் புகார் அளிக்க முடியும்? அது எப்படி வெளிவரும், " என்கிறார் அவர்.

உடந்தையாக இருக்கும் மருத்துவர்கள்

"போரா சமுதாய மத குருக்களிடமும் அரசு பேச வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கொடிய சடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாது," என்கிறார் மசூமா.

சில படித்த, பணமுள்ள போரா குடும்பத்தினர் மருத்துவர்கள் மூலம் இதைச்செய்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இது ஒரு மருத்துவ நடைமுறை அல்ல என்பதால் மருத்துவர்களுக்கும் இதுகுறித்து எதுவும் தெரியாது. எனினும் பணத்துக்காக அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள்," என்று கூறும் மசூமா இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.

"பெண் உறுப்பு சிதைப்பை முடிவுக்கு கொண்டுவர நாம் மருத்துவர்களின் உதவியையும் பெற வேண்டும். கற்பதிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை செய்வது குற்றமாக்கப்பட்டதைப் போல பெண் உறுப்பு சிதைப்பு செய்வதும் குற்றமாக்கப்பட வேண்டும்," என்று முடிக்கிறார் மசூமா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :