100 மில்லியன் ஆண்டுகள் காத்திருந்து கதை சொல்லும் சிலந்தி

  • ஹெலன் பிரிக்ஸ்
  • பிபிசி
இவ்வுலகில் எப்படி தோன்றின சிலந்திகள்?

பட மூலாதாரம், Bo Wang

100 மில்லியன் ஆண்டுகளாக புதைப்படிவமாக மர இடுக்கில் பிசினில் சிக்கிக் கொண்டிருந்த சிலந்தி வகை உயிரினம் ஒன்று சிலந்திகள் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்பது குறித்த தகவல்களில்  வெளிச்சம் பாய்ச்சுகிறது. 

இந்த உயிரினத்துக்கு அதன் நவீன கால உறவினர்களை போல் அல்லாமல் வால் உள்ளது.

இது சிலந்தி மற்றும் தேள் போன்ற உயிரினங்களுடன் தொடர்புடைய அனார்சினிட் குழுவை சேர்ந்தது

தென்கிழக்கு ஆசியாவில் மழைக்காடுகளில் இந்த உயிரினம் இன்னும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இதன் தொலைதூர வசிப்பிடமும் சிறிய உருவமும் அவை மியான்மரில் நாட்டில் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்று காண்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் செல்டன் கூறுகிறார்

புதைபடிமம் ஆகிப்போன மரங்களின் பிசினில் பாதுகாக்கப்பட்டிருந்த தோல் ரோமம் சிறகுகள் ஆகியன இதற்கு முன்பு அந்நாட்டில் கண்டெடுக்க பட்டுள்ளன 

டி.ரெக்ஸ் டைனோசர் பூமியில் வாழ்ந்த காலத்தில் அந்த சிலந்தி வாழ்ந்து உள்ளது. 

பல விலங்குகளின் தோற்றத்தை கொண்டுள்ள கிரேக்கர் புராதான உயிரினமான கிமேரா என்பதன் பெயரை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் ஆய்வாளர்கள் இந்த உயிரினத்துக்கு கிமேரார்சினே இங்கி என்று பெயர் சூட்டியுள்ளனர். 

சுமார் 310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனார்கினிட் வகை உயிரினங்களில் இருந்து சிலந்தி தோன்றியது என்பது கடந்த சில தசாப்தங்களாக தான் தெரியும் என்று  மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரஸ்ஸல் கார்வுட் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

இதுவரை இத்தகைய புதைப் படிமத்தை கண்டுபிடித்ததில்லை. எனவே இது மிகவும் பெரிய கண்டுபிடிப்பு என்கிறார் அவர்.

இந்த உயிரினம் பட்டு நூலை உற்பத்தி  செய்திருக்கும் ஆனால் வலை பின்னியிருக்காது. எனினும் இதன் வால் எதற்காக பயன்பட்டது என்றும் இந்த உயிரினம் நச்சுத்தன்மை உடையதாக இருந்ததா என்பதும் தெளிவாக தெரியவில்லை. 

சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் சிலந்தியோடு இணைந்து இந்த உயிரினங்களும் வாழ்ந்து இருக்கலாம் . எனினும் குறைந்தபட்சம் 295 மில்லியன் ஆண்டுகளை விடவும் குறைவான வயதுடைய இந்த உயிரினத்தின் புதை படிவத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார் கார்வுட்.

உலகில் வாழும் உயிரினங்களில் மிகவும் வெற்றிகரமானதாகக் கருதப்படும்  உயிரினங்களில் ஒன்றான சிலந்திகளில் சுமார் 47,000 வகைகள் உள்ளன. 

கடந்த பல நூறு மில்லியன் ஆண்டுகளில் நச்சு மூலம் இரையை கொல்வது உள்ளிட்ட பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு சிலந்திகள் உள்ளாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: