பக்தர்கள் முகத்தில் பூச்சி மருந்து அடித்த பாதிரியார்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

தவளை இனத்தை காக்க முயற்சி

பொலிவியாவில் உள்ள 10 வயதாகும் சேவென்காஸ் வகை நீர்த் தவளை ஒன்றுக்கு இனப்பெருக்கம் செய்ய இணை ஒன்றைத் தேடும் முயற்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இறங்கியுள்ளனர்.

ரோமியோ என்று பெயரிடப்பட்ட அந்த தவளையே அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என்று கருதப்படுகிறது. 'ஜூலியட்டுக்காக காத்திருக்கும் ரோமியோ' என்று குறிப்பிட்டு அந்தத் தவளையின் பெயரில் டேட்டிங் இணையதளம் ஒன்று கணக்கு ஒன்றை உருவாக்கியுள்ளது.

மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்களை கடத்தல் செய்து வந்த கும்பலின் தலைவரை பிடித்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜோசே மரியா குல்சார் வேலன்சியா எனும் அந்த நபர் மெக்சிகோவில் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக கருதப்படுகிறார். போதைப் பொருள் வணிகத்தால் உண்டான வன்முறையால் 2017இல் மட்டும் அந்நாட்டில் 25,000க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளன.

தென்கொரியாவில் வடகொரியாவைத் தவிர்த்த அமெரிக்க துணை அதிபர்

தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்கவிழாவின்போது நடந்த விருந்து ஒன்றில் வடகொரியா அதிகாரிகளுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ்மறுத்துவிட்டார்.

அந்த விருந்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

பக்தர்களின் முகத்தில் பூச்சி மருந்து அடித்த பாதிரியார்

தென்னாப்பிரிக்காவில் தனது பக்தர்களின் முகத்தில் பூச்சி மருந்து அடித்த தனக்கென தனி வழிபாட்டு முறையை உருவாக்கிக்கொண்ட பாதிரியார் ஒருவர் செய்தது குற்றம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தான் பயன்படுத்தும் பூச்சி மருந்து புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி ஆகியவற்றை குணப்படுத்தும் என்று 2016இல் பாதிரியார் லெதேபோ ரபாலகோ கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :