குளிர்கால ஒலிம்பிக்: தென்கொரிய விருந்தில் வடகொரியாவைத் தவிர்த்த அமெரிக்கா

தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்கவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிகாரபூர்வ விருந்தில் வடகொரியா அதிகாரிகளுடன் மேசையைப் பகிர்ந்துகொள்ளாமல் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தவிர்த்தார்.

North Korea USA Winter Olympics

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

வடகொரியா குழுவின் தலைவரான கிம் யோங்-நாம் அந்த விருந்தில் கலந்துகொண்டார். எனினும், அவர்கள் இருவரும் நேரடியாக பார்த்துக்கொள்வதையும் பேசிக்கொள்வதையும் தவிர்த்தனர் என்று யோன்ஹாப் செய்தி முகமை தெரிவிக்கறது.

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கிம் யோங்-நாம் உடன் கை குலுக்கியபோது பென்ஸ் அதைத் தவிர்த்துள்ளார். அந்த விருந்து தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பென்ஸ் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

அந்த விருந்தின்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் ஆண்டானியோ காட்டரசை கிம் யோங்-நாம் சந்தித்துப் பேசினார்.

அமைதியான முறையில் அணு ஆயுதத் திட்டங்கள் கைவிடப்படுவது குறித்து அப்போது காட்டரஸ் நம்பிக்கை தெரிவித்தார் என்று ஐ.நா செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

'அமைதி தொடங்கும் நாள்'

'குளிர்கால ஒலிம்பிக் தொடங்கும் நாள் அமைதி தொடங்கும் நாளாக' நினைவுகூரப்படும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அவ்விருந்தின்போது கூறியுள்ளார். அவர் இன்று, சனிக்கிழமை, வடகொரியா அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தொடக்கவிழாவின்போது கிம் யோ-ஜாங் உடன் கை குலுக்கும் தென்கொரிய அதிபர்

இதனிடையே மூன் ஜே-இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி கிம் யோ-ஜாங்கை ஒலிம்பிக் தொடக்கவிழாவின்போது நேரில் சந்தித்துக் கை குலுக்கினார்.

வடகொரியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபின், நாடு திரும்பிய சில நாட்களில் உயிரிழந்த அமெரிக்க மாணவரான ஓட்டோ வாம்பியரின் தந்தை ஃபிரெட் வாம்பியரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க தன்னுடன் விருந்தினராக பென்ஸ் அழைத்து வந்துள்ளார்.

விளையாட்டால் அமைதி திரும்புமா?

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா அணிவகுப்பில் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தின் ஒரே கொடியின்கீழ் அணிவகுத்து சென்றன. எனினும் அந்த அணிவகுப்பு வடகொரியாவின் அரசு ஊடகத்தில் ஒளிபரப்பப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒரே கொடியின்கீழ் அணிவகுத்து இரு கோரிய நாடுகளின் வீரர்கள்

மகளிர் ஐஸ் ஹாக்கி போட்டியிலும் இரு நாடுகளும் ஒரே அணியாக களமிறங்கவுள்ளன. விளையாட்டு வீர்கள் 22 பேருடன் இசைக்கலைஞர்கள், அதிகாரிகள் உள்பட 400க்கும் மேலானவர்களை வடகொரியா தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது.

வழக்கமாக ஏப்ரல் மதம் நடத்தும் ராணுவம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் அணிவகுப்பை, குளிர்கால ஒலிம்பிக் தொடங்குவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 8 அன்று வடகொரியா நடத்தியது.

எனவே விளையாட்டு போட்டிகளில் உறவு ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மைக் பென்ஸ்-க்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு பின் வரிசையில் வடகொரிய அதிபரின் தங்கை அமர்ந்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :