டேட்டிங் தளத்தில் ஜோடி தேடும் ஆண் தவளை

குழந்தையில்லாத ஆண் தவளை ஒன்றுக்கு ஜோடியாக பெண் தவளையை தேடும் முயற்சியை பொலிவியா முழுவதுமுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னெடுத்து தேடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 10 வயதாகும் சேவென்காஸ் வகை நீர்த் தவளை ‘ரோமியோ‘

பொலிவியாவில் உள்ள 10 வயதாகும் சேவென்காஸ் வகை நீர்த் தவளை ஒன்றுக்கு இனப்பெருக்கம் செய்ய இணை ஒன்றைத் தேடும் 9 ஆண்டுகால முயற்சிக்கு இன்னும் பயன் கிடைக்கவில்லை.

'ரோமியோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தவளைதான் அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என்று கருதப்படுகிறது.

இந்த தவளையை வைத்து இனப்பெருக்கத் திட்டம் தொடங்குவதற்கு நீரேடைகள், ஆறுகளில் பெண் தவளை ஒன்றை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.

இந்த ஆண் தவளை நம்பிக்கையை இழந்துவிட கூடாது என்று விரும்புகிறோம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரான அர்டுரோ முனோஸ் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

"இந்த வகையை சேர்ந்த பெண் தவளைகள் உள்ளன. அதன் மூலம் இனப்பெருக்கம் செய்து இந்த தவளை இனத்தை பெருக்க முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

சேவென்காஸ் வகை நீர்த் தவளை 15 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் இருக்காது என்பதால், இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் விரைவாக செயல்பட வேண்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Match
Image caption டேட்டிங் இணையதளத்தில் ரோமியாவின் பக்கம்

எனவே, கோச்சாபாம்பா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாழும் ரோமியோவுக்கு தன்னுடைய இனத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு சுமார் 5 ஆண்டுகள்தான் உள்ளன.

இந்நிலையில், 'ஜூலியட்டுக்காக காத்திருக்கும் ரோமியோ' என்று குறிப்பிட்டு அந்தத் தவளையின் பெயரில் டேட்டிங் இணையதளம் ஒன்று, ஒரு பக்கத்தை உருவாக்கி பெண் தவளையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

வரவிருக்கும் காதலர் தினத்திற்கு முன்னதாக 15 ஆயிரம் டாலர் நிதி திரட்டும் முயற்சியாக 'மேச்' என்கிற டேட்டிங் இணையதளம் ஒன்று ரோமியோ தவளையின் பெயரில் படங்கள் மற்றும் முக்கியமான தகவல்களோடு இந்தப் பக்கத்தை தொடங்கியுள்ளது.

"மிகப் பெரிய ஒன்றைத் துவங்க வேண்டாம், ஆனால் எனது இனத்தின் கடைசி நபராக நான் இருக்கிறேன்," என்று தவளை கூறுவது போல இந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

"நான் தனியாக இருக்க வேண்டியுள்ளது. வீட்டிலேயே குளிரடிக்கும் சிறந்த இரவுகளைக் கழித்து கொண்டிருக்கிறேன், என்னைச் சுற்றியுள்ள தண்ணீரைப் பார்த்து கொண்டிருக்கிறேன்" என்று தவளையின் தன் விவரக் குறிப்பு நீள்கிறது.

"என்னைப் போன்று இன்னொரு சேவென்காஸ் வகை நீர்த் தவளை எனக்கு தேவைப்படுகிறது. அது கிடைக்காவிட்டால், என்னுடைய முழு வாழ்க்கையும் முடியப்போகிறது (அது பெரிய விடயமல்ல)," என்று மேலும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :