“வட கொரியாவுக்கு வாருங்கள்” தென் கொரிய அதிபருக்கு கிம் ஜாங்-உன் அழைப்பு

கிம் ஜோங் உன்

பட மூலாதாரம், Getty Images

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தென் கொரிய அதிபரான மூன் ஜே-இன்னை வட கொரியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கொரிய தலைவர்களுக்கிடையே பல பத்தாண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சந்திப்பாக இது இருக்கலாம்.

கொரியர்களால் "இதை செயலாற்றி காண்பிக்க முடியும்" என்று கூறும் மூன், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா ஒத்துழைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட நிலையில், தென் கொரியாவின் அதிபர் மாளிகையில் நடந்த அதிகாரப்பூர்வ சந்திப்பின்போது கைகளால் எழுதப்பட்ட அழைப்பிதழை கிம்மின் சகோதரியான கிம் யோ-ஜாங், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னிடம் வழங்கினார்.

1950-1953 இல் நடைபெற்ற கொரியப் போருக்குப் பின், தென்கொரியாவிற்கு செல்லும் வட கொரியாவை ஆளும் குடும்பத்தின் முதல் நேரடி உறுப்பினர் கிம் யோ-ஜாங் ஆவார்.

முட்டைக்கோஸால் செய்யப்படும் உணவு வகையான கிம்சி, ஒருவித மதுபானமான சோஜுவை பகிர்ந்துகொண்டதுடன் தொடர்ந்து ஆறு மணிநேரத்திற்கும் அதிகமாக இவர்கள் உரையாடினார்கள்.

மூனுக்கு அழைப்பு விடுத்துள்ள கிம் "விரைவில் சந்திக்க வருமாறு" கேட்டுக்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"கொரியர்களின் இதயத்தில் பியோங்யாங் மற்றும் சியோல் நெருக்கமாகிவிடும்" என்றும் "எதிர்காலத்தில் ஒற்றுமை மற்றும் சிறப்பான உறவு உருவாகும்" என்று நம்புவதாகவும் கிம்மின் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளின் செய்தியாளர் பதிவிட்ட டுவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவுடனான தென் கொரியாவின் உறவு குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள வேளையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

வட கொரியாவின் அணுசக்தி திட்டங்கள் குறித்து பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது தென் கொரியா வட கொரியாவின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கையாக உள்ளது.

வட கொரியாவுடன் சுமூகமான உறவு ஏற்படுத்தப்படும் என்று மூன் உறுதியளித்துள்ள நிலையில், அது அவர்களது கூட்டாளியான அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக இருக்குமென்பதால் மூன் தற்போது கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது அருகருகே இருந்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும், கிம் யோங்-நாம் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதை தவிர்த்ததாக யோன்ஹப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின்போது பென்ஸ், கிம் யோ-ஜாங் மற்றும் கிம் யோங்-நாம் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கிம் யோ-ஜாங்?

பட மூலாதாரம், AFP

30 வயதான கிம் யோ-ஜாங், மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளும், கிம் ஜாங்-உன்னின் தங்கையும் ஆவார்.

வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இருக்கும் தொடர்புகள் காரணமாக கிம் யோ-ஜாங் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

கிம் ஜாங்-உன்னை விட 4 ஆண்டுகள் இளையவரான இவர், தன்னுடைய சகோதரருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :