குடும்ப வன்முறை குற்றச்சாட்டு: ஒரே வாரத்தில் 2-ஆவது வெள்ளை மளிகை ஊழியர் பதவி விலகல்

குடும்ப வன்முறை குற்றச்சாட்டு: ஒரே வாரத்தில் இரண்டாவது வெள்ளை மளிகை ஊழியர் பதவி விலகல்

பட மூலாதாரம், Reuters

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையை சேர்ந்த உதவியாளர் ஒருவர் குடும்ப வன்முறை சார்ந்த குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியுள்ளார்.

சுற்றுசூழலின் தரத்தை கண்காணிக்கும் அமெரிக்க அரசின் குழுவொன்றில் உரை எழுதுபவராக பணியாற்றிய டேவிட் சோரென்சன் மீதே தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்தான் டிரம்ப் நிர்வாகத்தில் பணிபுரிந்த ராப் போர்ட்டர் என்பவர் மீது அவரது இரண்டு முன்னாள் மனைவிகள் எழுப்பிய குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலக நேரிட்டது.

போர்ட்டர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வெள்ளை மாளிகைக்கு எவ்வளவு காலமாகுமென்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

சமீபத்திய குற்றச்சாட்டு என்ன?

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய சோரென்சனின் முன்னாள் மனைவியான ஜெசிகா கார்பெட், தாங்கள் திருமணம் செய்துகொண்டபோது, சோரென்சன் தனக்கு உடல்ரீதியாக துன்புறுத்தலை கொடுத்ததாக கூறியுள்ளார்.

தனது முன்னாள் கணவரான சோரென்சன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனது காலில் காரை ஏற்றியும், சுவரை நோக்கி எறிந்தும், சிகரெட்டை பற்ற வைத்து கையில் வைத்தும் துன்புறுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சோரென்சன், "என் வாழ்நாளில் எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் நான் எந்த விதமான வன்முறையையும் செய்ததில்லை" என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தான் எண்ணி வருவதாக கூறும் சோரென்சன், "இந்த திசைத் திருப்பல் நடவடிக்கையில் வெள்ளை மாளிகையை தொடர்புபடுத்த வேண்டாம்" என்பதற்காகவே பதவியைவிட்டு விலகியதாக தெரிவித்துள்ளார்.

சோரென்சன் மீதான அவரின் முன்னாள் மனைவி வைத்த குற்றச்சாட்டு குறித்து தங்களுக்கு வியாழக்கிழமை பிற்பகுதிலேயே தெரிய வந்ததாக வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியரை சந்தித்தோம், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த நிலையில் இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்" என்று வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவின் துணை செயலாளரான ராஜ் ஷா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :