முகமூடி சர்ச்சையில் சிக்கிய வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படை

பெண்கள் படை படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படை தாங்கள் அணிந்திருந்த முடிமூடி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது.

முகமூடியில் இருக்கும் நபர் வட கொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும், வட கொரியாவின் முதல் தலைவருமான கிம் இல்-சூங் போல இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

வட கொரியா இந்த போட்டிகளை தனது பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வதாகத் தென் கொரியாவில் உள்ள பழமைவாத குழுக்கள் கூறுகின்றன.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான கூட்டு கொரிய அணியின் பெண்கள் ஐஸ் ஹோக்கி போட்டியின்போது, முடிமூடி அணிந்த உற்சாகமூட்டும் பெண்கள் படை தோன்றியது. குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி குழுவில் இப்படையும் இடம்பெற்றுள்ளது.

கொரிய அணியை 0-8 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வீழ்த்திய இப்போட்டியை, பல உயர் விருந்தினர்கள் பார்த்தனர்.

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன், வட கொரிய தலைவரின் சகோதரி கிம் யோ-ஜாங், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உள்ளிட்டோர் இப்போட்டியைப் பார்வையிட்டனர்.

''அழகிய படை'' என அழைக்கப்படும் இந்த பெண்கள், கிம் இல்-சூங்கின் முகம் கொண்ட முகமூடியை அணிந்து உற்சாகமூட்டிக்கொண்டிருந்தனர் என தென் கொரிய ஊடக நிறுவனமான நோகட்நியூஸ் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption முகமூடியில் இருக்கும் வட கொரியாவின் முதல் தலைவருமான கிம் இல்-சூங்கின் இளமை கால படம் போல இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் கூறுகின்றன

இந்த செய்தி பின்னர் அழிக்கப்பட்டபோதிலும், தற்காலிக சேமிப்பில் இந்த செய்தி இன்னும் உள்ளது.

தனது பிரசாரத்தை ஊக்குவிக்கவும், தனது நாடு மீது உள்ள சர்வதேச பார்வையை மேம்படுத்தவும் வட கொரியா இந்த போட்டிகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என்ற கவலைகள் உள்ளன.

தென் கொரியாவின் ஒருங்கிணைந்த அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

''போட்டியின் போது இருந்த வட கொரிய அதிகாரிகளிடம் பேசியபிறகு, முடிமூடி அணிந்ததில் இதுபோன்ற அர்த்தமும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது'' என அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

இது ஒரு அழகிய நபரின் பொதுவான புகைப்படமே என அதிகாரிகள் கூறினர்.

''வட கொரியாவின் கலாச்சாரத்தின்படி, கிம் இல்-சூங்கை உயர்ந்த கண்ணியத்துடன் பார்க்கின்றனர். எனவே அணியை உற்சாகப்படுத்த அவரது படத்தை பயன்படுத்தியிருப்பது சாத்தியமற்றது'' என்கிறார் தென் கொரியாவின் ஆளும் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்