தென் ஆஃப்ரிக்கா: அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல்

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்துள்ளததைத் தொடர்ந்து அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது

இன்று செவ்வாய்க்கிழமை, அதிகாலை முதல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அவரை அதிபர் பதவியில் இருந்து திரும்ப அழைப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ஜூமா என்ன பதில் தெரிவித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவரது அலுவலகமும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது 75 வயதாகும் ஜூமா அந்த முடிவுக்கு இணங்கவில்லையெனில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த 2009 முதல் பதவியில் உள்ள ஜூமா தனது பதவிக்காலத்தில் பெரும்பாலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.

அவரைப் பதவியில் இருந்து நீக்க தனது திட்டங்கள் என்னவென்பதை அக்கட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், அக்கட்சியினர் சிலர் இதை தென் ஆஃப்ரிக்க ஊடகங்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவற்றிடம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஆஃப்ரிக்க தேசிய காங்கிரசின் கூட்டத்திலிருந்து வெளியேறி ஜூமாவைச் சந்திக்க சென்ற அக்கட்சியின் தலைவர் சிரில் ராமபோசா, ஜூமா பதவி விலகாவிட்டால் அவர் திரும்ப அழைக்கப்படுவார் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்திப்புக்கு பின்னர் ராமபோசா மீண்டும் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

தனக்குச் சொந்தமான வீட்டுக்கு செலவு செய்த அரசுப் பணத்தை திரும்பச் செலுத்தாததன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஜூமா மீறிவிட்டார் என்று 2016இல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சிரில் ராமபோசா

பின்னர், 1999இல் நடந்த ஆயுத ஒப்பந்தத்தில் ஊழல், முறைகேடு, அச்சுறுத்தி பணம் பறித்தல், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட 18 குற்ற வழக்குகளை ஜூமா சந்திக்க வேண்டும் என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு கூறியது.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்ததாக பொதுமக்களின் கோபத்துக்கு ஆளானார். இதை ஜூமா, குப்தா குடும்பத்தினர் ஆகிய இருவருமே மறுத்துள்ளனர்.

ஜூமா பதவி விலக சாத்தியம் உள்ளதா?

தனது கட்சியின் பதவி விலகல் அறிவுறுத்தலை ஜூமா மறுப்பது மிகவும் கடினமான ஒன்று. எனினும், கட்சியின் நம்பிக்கையை இழந்துள்ள போதிலும் அவர் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பூர்வமான அழுத்தம் எதுவும் இல்லை.

படத்தின் காப்புரிமை AFP

வரும் பிப்ரவரி 22 ஆண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவர் எதிர்கொள்ளவுள்ளார். அது ஒரு வேளை முன்கூட்டியே நடத்தப்படலாம்.

இதற்கு முன்பு இத்தகைய வாக்கெடுப்புகளில் அவர் தப்பியுள்ளார். ஆனால், இம்முறை அதற்கு அதிக சாத்தியம் இல்லை. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அது அவருக்கு மட்டுமல்லாது அவரது கட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்கும்.

கடந்த 2008இல் துணை அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமாவுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால், அப்போதைய அதிபர் தாபோ முபேக்கி பதவியில் இருந்து விலகினார்.

நெல்சன் மண்டேலா தலைமையில் 1994இல் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 2016இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்தான் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் குறைந்த வாக்கு விகிதத்தைப் பெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்று திங்களன்று கோரிக்கை விடுத்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: