ஜேக்கப் ஜூமா: ஓர் அரசியல் கைதியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஒரு காலத்தில் 'மக்களின் அதிபர்' என்று அழைக்கப்பட்டார். முறையான கல்வி இல்லாத, வசீகரம் மிக்க அரசியல் கைதியான அவர் தென் ஆஃப்ரிக்க அரசியலின் உச்சத்தை அடைந்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜேக்கப் ஜூமா

ஆனால், தற்போது அவரது பெயரைச் சொன்னாலே ஊழல் என்று பொருள்படும்படி ஆகிவிட்டது.

இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்தாக பொதுமக்களின் கோபத்துக்கு அவர் ஆளானார். இதை ஜூமா, குப்தா ஆகிய இரு குடும்பத்தினருமே மறுத்துள்ளனர்.

ஜூமாவின் கிராமப்புற வீட்டை புணரமைக்க பல கோடி டாலர் மக்கள் வரிப் பணம் செலவிடப்பட்ட விவகாரம் ஒன்றும் வெளியானது. அந்த வீட்டின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த செலவிடப்பட வேண்டிய அந்தப் பணத்தில் நீச்சல் குளம், கம்பி வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. விவகாரம் பெரிதானதும் கூடுதலாக செலவிட்ட பணத்தை திரும்ப செலுத்திவிட்டார் ஜூமா.

கறுப்பர்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறி ஆட்சியின் கீழ் வறுமையில் வளர்ந்தவர் ஜூமா. அவரது தாய் பிற வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். ஜூமா கால்நடைகள் மேய்த்து வந்தார்.

அவரை இரு முறை அதிபராக தென்னாப்பிரிக்க மக்கள் தேர்ந்தெடுக்க இந்த எளிய பின்னணியை காரணம்.

பதின் வயதில் தொடங்கிய அரசியல் பயணம்

ஜூமா தனது பதின் வயதிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ராபன் தீவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது

அங்கிருந்து விடுதலையான பின் பெரும்பாலான காலத்தை வெளிநாடுகளிலேயே கழித்தார். அப்போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவத்தில் தொடர்ந்து பதவி உயர்வு பெற்றார்.

சிறுபான்மை வெள்ளை இனத்தவரின் ஆட்சிக்கு முடிவுகட்டி நெல்சன் மண்டேலா அதிபராக பதவியேற்றத்தில் ஜூமாவுக்கு முக்கியப் பங்குண்டு.

தனது நெருங்கிய நண்பர் தாபோ உம்பெக்கி அதிபராக இருந்தபோது துணை அதிபராக ஜூமா பணியாற்றினார். இருவருக்குள்ளும் பிரச்சனை உருவானது. ஊழல் குற்றச்ச்சாட்டின்பேரில் உம்பெக்கி அவரை பதவி நீக்கம் செய்தார்.

இறுதியில் அதிகாரப்போட்டியில் ஜூமா வெற்றி பெற்றார். ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரானார் ஜூமா. ஜூமாவின் முன்னாள் நண்பர் உம்பெக்கி அதிபர் பதவியில் இருந்து விலகப் பணிக்கப்பட்டார்.

அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு கூட அவரது செல்வாக்கைப் பாதிக்கவில்லை. ஜூமா மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனினும், ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது தெரிந்தும் அப்பெண்ணுடன் பாலுறவு கொண்டதை ஜூமா ஒப்புக்கொண்டார்.

பிபிசி உடனான ஒரு நேர்காணலில் தான் சில தவறுகளைச் செய்துள்ளேன் என்பதை ஒப்புக்கொண்ட ஜூமா, அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதகாகக் கூறினார். ஆனால், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாபோ உம்பெக்கி

"இது நீங்கள் செய்யும் தவறு. நான் தற்போது இரு விசாரணைகளை எதிர்கொள்கிறேன். ஒன்று ஊடங்கங்கள் செய்யும் விசாரணை. இன்னொன்று நீதிமன்றத்தின் விசாரணை. நான் மோசமானவன் இல்லை. மோசமானவனாக எப்போதுமே இருந்ததில்லை," என்று அப்போது அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் வறுமையை ஒழித்ததில் அவரது பங்கு அசாதாரணமானது. மிகவும் மதிக்கப்பட்ட நிதி அமைச்சரை அவர் பதவி நீக்கம் செய்தபின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது.

சமீபத்திய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில், தன்னுடன் மோதல்போக்கில் உள்ள வெளிநாட்டு சக்திகளே தம்மை கீழே தள்ள முயல்வதாக அவர் கூறினார்.

கடைசியில், அவரது முடிவு அவரது கட்சிக்குள் இருந்தே வந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆழமான விரிசல்களை உண்டாக்கியது. மக்களிடையே அவரது கட்சிக்கு மிகவும் மோசமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வரும் 2019இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை ஜூமா தலைமையில் சந்திப்பது அக்கட்சிக்கு மிகவும் ஆபத்தான முடிவாகவே இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: