பிறந்த குழந்தையை சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை: ஏன்... எதனால்?

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பிறந்த குழந்தை சிறைப்பிடிப்பு

மத்திய ஆஃப்ரிக்க நாடான கேபானில், மருத்துவ கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பிறந்த குழந்தையை பல மாதங்களாக சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை, கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தது. ஏஞ்சல் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் இருந்தது. கட்டணம் செலுத்த ஏஞ்சலின் பெற்றோர்ர் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் 3630 டாலர் திரண்டது. இத்தொகை மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அலி போங்கோவும் நிதி அளித்தது குறிப்பிடதக்கது.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வழக்கு?

படத்தின் காப்புரிமை AFP/getty images

லஞ்சம் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படும் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு எதிராக போதமான ஆதாரங்கள் உள்ளன. அதனால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் போலீஸ் கூறி உள்ளது. போலீஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் லஞ்சம், ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை துரோகம் என இருவேறு வழக்குகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை நேதன்யாஹு மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி உள்ள அவர், தான் பிரதமராக தொடர போவதாக கூறி உள்ளார்.

எப்படி ஏற்பட்டது விபத்து?

படத்தின் காப்புரிமை AFP

விமானத்தில் உள்ள வேக உணரிகள் குளிர்ச்சி அடைந்ததால் மாஸ்கோ விமான விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கூறி உள்ளனர். பழுதடைந்த வேக உணரிகள், விமானம் செல்லும் வேகம் குறித்து விமான ஓட்டிகளுக்கு தவறான தகவல்களை அளித்து இருக்கலாம் என்று கூறி உள்ளது ரஷ்ய இன்ஸ்ட்டேட் ஏவியேஷன் கமிட்டி. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 71 பேர் இறந்தனர்.

அமெரிக்கா தாக்குதல்... கொல்லப்பட்ட ரஷ்யர்கள்

படத்தின் காப்புரிமை EPA

குறைந்தது இரண்டு ரஷ்ய ராணுவ வீரர்களாவது சிரியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்ட வான் வழி தாக்குதலில் இறந்திருக்கலாம் என்று பிபிசியிடம் பேசிய அவர்களது கூட்டாளிகள் கூறி உள்ளனர். அரசுக்கு ஆதரவாக இருக்கும் தனியார் படைகளுக்காக, அந்த ரஷ்ய வீரர்கள் பணி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யா இதனை உறுதி செய்யவில்லை.

இஸ்ரேலிய வீரரை அறைந்த பாலித்தீன பெண்

படத்தின் காப்புரிமை AFP

ஒரு பாலித்தீனிய பதின்பருவ பெண், இஸ்ரேலிய ராணுவ வீரரை அறையும் ஒரு காணொளி காட்சி வைரலாக பரவியது. இதனை அடுத்து, அந்த பெண் இஸ்ரேலிய ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். அஹத் தமிமி எனும் அந்த 17 வயது பெண் மீது 12 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: