ஜூமா பதவி விலக வேண்டுமா? என்ன சொல்கிறார்கள் தென் ஆப்ரிக்க தமிழர்கள்?

சாதாரண நிலையில் இருந்து தென் ஆப்ரிக்காவின் அதிபராக உயர்ந்த ஜேக்கப் ஜூமா மீது அந்நாட்டில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்ததாக பொதுமக்களின் கோபத்துக்கு அவர் ஆளானார். இதை ஜூமா, குப்தா ஆகிய இரு குடும்பத்தினருமே மறுத்துள்ளனர்.

மேலும், இன்று புதன்கிழமை ஜூமாவுக்கு நெருக்கமான குப்தா தொழில் குடும்பத்தினரின் வீட்டில் அந்நாட்டு பெரும் குற்ற வழக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

குப்தா சகோதரர்களில் ஒருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image copyrightGETTY IMAGES
Image caption ஜூமா பதவி விலக நடந்த ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தும், ஜுமா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் துணை தலைவரான நடேஸ் பிள்ளை பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

'குப்தா குடும்பத்தினர் மீதான விசாரணை நல்ல தொடக்கமே'

''தென் ஆப்ரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் கவலை தரும் ஒன்றுதான். ஜேக்கப் ஜூமா மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள சூழலில் அவர் பதவி விலகுவதுதான் சரி'' என்று நடேஸ் பிள்ளை கூறினார்.

''குப்தா குடும்பத்தினர் மீது இன்று தொடங்கிய விசாரணை ஒரு நல்ல தொடக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், இனி பல விஷயங்கள் வெளிவருவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை GALLO IMAGES
Image caption ஜூமா மற்றும் குப்தா குடும்பங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு?

குப்தா தொழில் குடும்பத்தினருக்கும், ஜுமாவுக்கு உள்ள தொடர்பு குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது பதிலளித்த அவர், ''இந்த குற்றச்சாட்டு முழுவதும் உண்மையா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, ஜுமாவின் மகன் குப்தா குழுமத்துடன் இணைந்து பணியாற்றியதும், குறுகிய காலத்தில் அவர் பெரும் செல்வந்தராக உருவெடுத்ததும் சந்தேகத்தை எழுப்புகிறது'' என்று குறிப்பிட்டார்.

'குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க ஜுமாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்'

ஜூமா பதவி விலகினாலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தென் ஆப்ரிக்க இந்திய சமூகத்தினரின் கருத்து என்றும் அவர் கூறினார்.

''மற்ற நாடுகளில் உள்ள அரசியல் சூழலை இதனுடன் ஒப்பிடமுடியாது. தென் ஆப்ரிக்க அரசியல் சூழல் வேறு. இனியும் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்தால் சட்டரீதியான நடைமுறைகள் மூலம் அவர் பதவி நீக்கப்படலாம்'' என்று நடேஸ் பிள்ளை மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நீண்ட காலமாக வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவரான ஹேமேந்திரன் படையாச்சி பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

''ஜேக்கப் ஜூமாவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சி வலியுறுத்தியது தென் ஆஃப்ரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும். இந்தியப் பார்வையில் கூற வேண்டுமானால் இது தொழில்துறைக்கு நன்மையாக அமையும்'' என்று ஹேமேந்திரன் தெரிவித்தார்.

'இனியும்ஜூமா பதவி விலக மறுத்தால்

''இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினர் தங்களுக்கு ஜூமாவுடன் இருந்த நெருக்கத்தால் அவரை பயன்படுத்தி சில ஆதாயங்கள் அடைந்துள்ளனர். ஜூமா மீது ஊழல் கறை படிந்ததற்கு அவர்களும் காரணம்'' என்று அவர் மேலும் கூறினார்.

ஆளுங்கட்சி கேட்டுக்கொண்ட பின்னரும் ஜூமா பதவி விலக மறுத்துள்ள நிலையில், இச்சூழலையும் இந்திய அரசியல் நிலையையும் ஒப்பிட்டு பேசிய ஹேமேந்திரன், ''பதவி மீது அதிகாரவர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரேமாதிரியான மனநிலையில்தான் உள்ளனர்.இவர்களுக்கு தங்களின் பதவி மட்டுமே குறி'' என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP

''இனியும் ஜூமா பதவி விலக மறுத்தால் அவர் மீது நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியால் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டரீதியான முறைகளால் அவர் பதவிநீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ளது'' என்று ஹேமேந்திரன் கூறினார்.

ஜூமா பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தென் ஆப்ரிக்காவில் முதலீடுகள் அதிகரித்து நாட்டில் பொருளாதார வளம் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்