இஸ்ரேல் - காசா எல்லைப்பகுதியில் குண்டுவெடிப்பு: 4 இஸ்ரேலிய ராணுவத்தினர் படுகாயம்

  • 18 பிப்ரவரி 2018
ராணுவம் படத்தின் காப்புரிமை Reuters

இஸ்ரேல் - காசா எல்லை அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவ இடத்தில் பாலத்தீனிய கொடி பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்ட ராணுவம், அங்கு துருப்புகள் நெருங்கிய போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, காசாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

2014ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடந்த போருக்கு பிறகு, எல்லையில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் இது என இஸ்ரேலிய ஊடகங்கள் விவரிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

கான் யூனிஸ் என்ற நகரத்தின் கிழக்கில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஜெர்மனியில் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ, "காசா எல்லையில் நிகழ்ந்த இச்சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

படத்தின் காப்புரிமை EPA

இதனையடுத்து, ஆறு ஹமாஸ் போராளிகளின் இலக்குகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

மேலும், மூன்று ஹமாஸ் பயிற்சி கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் யாரும் காயமடையவில்லை என பாலத்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் - காசா எல்லைப்பகுதி அமைதியாகவே இருந்ததாகவும், ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததில் இருந்து அப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: