குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த முதல் திருநங்கை: எப்படி சாத்தியமானது?

  • அலெக்ஸ் தெர்ரியன்
  • பிபிசி
குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த திருநங்கைப்பெண்

பட மூலாதாரம், Getty Images

முதன்முதலாக திருநங்கை ஒருவர், குழந்தைக்கு தாய்ப்பால் அளித்ததாகவும், இதுவே முதன்முதலில் பதிவான இது போன்ற சாதனை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க விருப்பமில்லை என்று தனது இணை கூறியதால், இந்த திருநங்கை தாய்ப்பால் அளித்ததாக, டிரான்ஸ்ஜெண்டர் ஹெல்த் ஜர்னல் மருத்துவ சஞ்சிகை தெரிவிக்கிறது.

குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்துக்கொண்டும், மார்பகங்களிலிருந்து பாலை வெளிகொணரும் முறையை பயன்படுத்தியும், வழங்கப்பட்டதாக அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த `வியப்பளிக்கும்` ஆய்வு, மேலும் பல திருநங்கைப்பெண்கள், தாய்ப்பால் அளிக்கும் நிகழ்விற்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய ராஜியத்தின் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும் திட்டத்துடன், மருத்துவரை அணுகியபோது, அவர், தனக்கான ஹார்மோன்களை மாற்றும் சிகிச்சையை கடந்த ஆறு மாதங்களாக பெற்றிருந்தார். ஆனால், தனது பாலினத்தைம் மாற்றியமைக்கு அறுவை சிகிச்சையை அவர் செய்துகொள்ளவில்லை.

குழந்தை பிறப்பதற்கு முன்பு, இவருக்கு, செயற்கையான முறையில், தாய்ப்பாலை உருவாக்குவதற்காக மூன்றரை மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுவாக, குழந்தைகளை தத்தெடுப்பவர்கள் அல்லது வாடகைத்தாய் முறையில் குழந்தைகள் பெறுவோருக்கு இந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில், மார்பகங்களில் பாலை வெளிக்கொணர்தல், குழந்தையின் தாயிடமிருந்து ஹார்மோன்களை பெறுதல், பால் சுரக்க உந்தும் மருந்துகளை உட்கொள்ளுதல், ஆண் பாலினத்தின் ஹர்மோன்களை தடுத்தல் ஆகியவை உள்ளடங்கும்.

இதன் விளைவாக, அப்பெண்ணால், ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 227 மி.லிட்டர் பால் வரை சுரக்க முடிந்தது.

குழந்தை பிறந்த முதல் 6 வாரங்களுக்கு இதுவே அதற்கான ஒரே ஊட்டச்சத்தாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

அதன்பிறகு, குழந்தைக்கு போதுமான அளவிலான தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதால், ஃபார்முலா பால் என்று குறிப்பிடப்படும், ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்ட செயற்கைப்பால் அளிக்கப்பட்டது.

தற்போது, ஆறு மாதங்களாகும் அந்த குழந்தைக்கு, இப்பெண்மணி, உணவின் ஒரு பகுதியாக, தொடர்ந்து தாய்ப்பாலையும் அளித்து வருகிறார் என்று, இந்த ஆய்வின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு `வியப்பளிக்கும் ஒரு முன்னேற்றம்` என்கிறார், இம்பீரியல் கல்லூரியின் மூத்த பேராசிரியரும், இனப்பெருக்க உட்சுரப்பியல் பிரிவின் நிபுணருமான மருத்துவர் சன்னா ஜயசேனா.

ஐக்கிய ராஜ்ஜியத்தில், திருநங்கைப்பெண்கள் சிலர், இவ்வாறு தாய்ப்பால் அளித்ததாக கேள்விப்பட்டுள்ளபோதிலும், இதுவரை இத்தகைய அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இவர்கள் குறித்த தகவல்களை ஒன்று திரட்டி, அதன்மூலமாக கிடைக்கின்ற தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலமாக, இந்த நோயாளிகளை எந்த விதமான சுகாதாரச்சிக்கல்களிலும் தள்ளிவிடாமல், அவர்கள் தாய்ப்பால் அளிப்பதற்கான முறையை நாம் கண்டறிவதே தற்போதைய தேவை." என்றார்.

அந்த பெண்ணிற்கான சிகிச்சையில், பயன்படுத்தப்பட்ட அனைத்து மருந்துகளுமே, பால்சுரக்கச்செய்ய தேவையானவையா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பால் அளிக்க விரும்பும் திருநங்கைப் பெண்களுக்கான அதிகபட்ச சிகிச்சை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு,

இந்தியாவின் முதல் முழுமையான திருநங்கை தம்பதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :