உலகப் பார்வை: சிரியா அரசு நடத்திய ராணுவத் தாக்குதலில் 77 பொதுமக்கள் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா போர்: போராளிகள் மீதான அரசு தாக்குதலில்77 பொதுமக்கள் பலி

பட மூலாதாரம், Mohammed Eyad/AFP/Getty Images

படக்குறிப்பு,

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு கிழக்கே உள்ள ஜோபர் பகுதியில் அமைந்துள்ள டீச்சர்ஸ் டவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசுப் படைகளின் தாக்குதலால் சல்லடையாகிக் கிடக்கிறது.

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டனர், என்று மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

'சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்' என்ற அந்த அமைப்பு இறந்தவர்களில் 20 பேர் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதாகவும், உடனடியாக குண்டு வீச்சை நிறுத்தவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு முதல் முற்றுகையில் உள்ள கிழக்கு கூட்டாவில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். டமாஸ்கஸ் அருகே போராளிகள் பிடித்துவைத்திருந்த பகுதிகளில் இன்னும் அரசு கட்டுப்பாட்டுக்கு வராத ஒரே பகுதி இதுதான்.

இந்தப் பகுதியை பிடிப்பதற்கான தாக்குதலை அரசுப் படைகள் இம்மாத ஆரம்பத்தில் தொடங்கியபோது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி வைத்திருப்போரின் பின்னணியை ஆராய டிரம்ப் ஆதரவு

படக்குறிப்பு,

கையில் துப்பாக்கியுடன் டொனால்டு டிரம்ப்

துப்பாக்கி உரிமங்கள் பெற விரும்புவோரின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை ஃப்ளோரிடா மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளுக்கு எதிராக விவாதங்களும், போராட்டங்களும் வெடித்துள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிக்கோலஸ் குரூஸ் சட்டப்படியாகவே தமது துப்பாக்கியை வாங்கியுள்ளார். ஃப்ளோரிடா மன நலப் பணியாளர்கள் இவரை 2016ல் பரிசோதித்துள்ளபோதும், இவரால் கடந்த ஓராண்டில் ஏழு ரைஃபிள் துப்பாக்கிகள் வாங்க முடிந்துள்ளது என்று அமெரிக்கப் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

இவற்றில் ஒன்றான ஏ.ஆர்.15 வகை செமி ஆட்டோமேட்டிக் ரைஃபிள் துப்பாக்கியைப் பயன்படுத்திய கடந்த வாரம் அவர் பள்ளியில் தாக்குதல் நடத்தினார்.

ஓநாய்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிக்கும் பிரான்ஸ்

பட மூலாதாரம், AFP/Getty Images

தங்கள் நாட்டில் உள்ள ஓநாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் அரசு அனுமதி வழங்கவுள்ளது.

தற்போது 360 ஆக உள்ள அந்த எண்ணிக்கையை 2023க்குள் 500 ஆக அதிகரிக்க தற்போது அனுமதி வழங்கப்படவுள்ளது. அதே நேரம், தங்கள் கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகின்றனர்.

1930ம் ஆண்டுகளில் பிரான்சிலிருந்த ஓநாய்களை வேட்டைக்காரர்கள் சுத்தமாக அழித்தனர். ஆனால், 1990க்குப் பிறகு இத்தாலியில் இருந்து பிரான்சுக்கு ஓநாய்கள் இடம் பெயர்ந்து வந்தன. பிரான்ஸ் கையெழுத்திட்டுள்ள பெர்ன் உடன்படிக்கையில் ஓநாய்கள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கவலைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் 40 ஓநாய்களைக் கொல்ல வேட்டைக்காரர்களுக்கு உரிமை இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு முதல் மொத்த ஓநாய் எண்ணிக்கையில் 10 சதவீதம் ஒவ்வோர் ஆண்டும் கொல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதிகமான ஓநாய்த் தாக்குதல் இருப்பதாகத் தெரியவந்தால், அது 12 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் பிரான்ஸ் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால், ஓநாய்களைக் காக்க இன்னும் வலுவான நடவடிக்கைகள் வேண்டும் என்று விலங்கு உரிமைப் பாதுகாவலர்கள் கோரிவருகின்றனர். அமைச்சர்களுக்கு அரசியல் துணிச்சல் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :