உலகின் மிகப் பெரிய மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்

பட மூலாதாரம், Sumitomo Forestry
2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடவுள்ள ஜப்பானிய நிறுவனமொன்று, அதையொட்டி உலகின் மிகப் பெரிய மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
சுமிட்டோமோ என்ற அந்த நிறுவனமானது, தங்களது 350வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள 70 மாடிகள் கொண்ட கட்டடமானது 10 சதவீதம் எஃகு மற்றும் 1,80,000 கன மீட்டர்கள் அளவிலான உள்நாட்டு மரங்களை கொண்டும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாடியிலும் பசுமையான மரங்களுடன் கூடிய பால்கனிகளோடு 8,000 வீடுகள் மொத்தமாக கட்டப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டடத்தை கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்?
70 மாடிகள் கொண்ட இந்த மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு 5.6 பில்லியன் டாலர்கள், அதாவது இதே அளவிலான வழக்கமான இரண்டு உயரமான கட்டடங்களை கட்டுவதற்குரிய தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக இந்த கட்டடத்தை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள 2041ஆம் ஆண்டிற்குள் கட்டுமான செலவு குறையுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற கட்டடத்தை கட்டுவது இதுதான் முதல்முறையா?
இல்லை. மூன்று தளங்களுக்கு குறைவாக கட்டப்படும் பொது கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் மரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பானிய அரசு நிறைவேற்றியது.
ஜப்பானில் மட்டுமல்லாது உலகளவிலும் இது புதுமையான கருத்துருவாக பார்க்கப்படவில்லை.
மரத்தினாலான கட்டடங்களை உலகம் முழுவதும் காண முடிகிறது, உதாரணத்துக்கு மினியாப்பொலிசிலுள்ள 18 மாடிகள் கொண்ட மரத்தினாலான அலுவலக கட்டடத்தை குறிப்பிடலாம். ஆனால், உலகிலேயே மிகப் பெரிய மரத்தினாலான கட்டடம் வான்கூவர் நகரிலுள்ள 53 மீட்டர் உயரமுடைய மாணவர்கள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பே ஆகும்.
சுற்றுசூழலுக்கு உகந்ததா?
கான்கிரீட் மற்றும் எஃகினால் கட்டப்படும் கட்டடங்கள் முறையே 8 மற்றும் 5 சதவீத உலகளவிலான மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது.
அதே வேளையில், மரத்தினாலான கட்டடங்கள் கார்பனை வெளியேற்றாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு வழிவகுக்கிறது.

பட மூலாதாரம், Putu Sayoga
மேலும், ஜப்பான் மிகப் பெரிய வனப்பரப்பை கொண்டுள்ளது. அதாவது அதன் மொத்த நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு மடங்கு காடுகளாகவே உள்ளது.
இத்திட்டத்தில் உள்ள சவால்கள் என்னென்ன?
தீ பரவுவதை தடுப்பது ஒரு முக்கிய சவாலாகும்.
இருந்தாலும், தற்போது பரவலாகி வரும் கிராஸ்-லேமினேட்டட் டிம்பர் (சிஎல்டி) என்னும் ஒருவித கட்டுமான பொருள், மரத்தினாலான கட்டடங்களை தீ பற்றுவதிலிருந்து தடுப்பதற்கும், வெப்பநிலை மாற்றத்தின்போது எஃகினால் கட்டப்பட்ட வீடுகள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்தும் தப்பிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்