உலகப் பார்வை: சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஐ.நா.வில் முட்டுக்கட்டை

  • 23 பிப்ரவரி 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ரஷ்யா முட்டுக்கட்டை

படத்தின் காப்புரிமை Reuters

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது உடன்பாடு ஏற்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தில் தங்கள் நாடு திருத்தம் கோரியுள்ளதாக ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபன்சியா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவர் "ஜனரஞ்சகமான" நடவடிக்கைகளைவிட "சாத்தியமான" நடவடிக்கைகளே தேவை என்று கூறினார்.

குவைத்தும், சுவீடனும் முன் மொழிந்த இத் தீர்மானத்தின்படி 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும். தீர்மானம் நிறைவேறிய 72 மணி நேரம் கழித்து தீர்மானம் அமலுக்கு வரும்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் அரசுப் படையினரின் குண்டு வீச்சு தீவிரமடைந்துள்ளதால் போர் நிறுத்தத்துக்கான கோரிக்கைகள் வலுவாக எழுந்துள்ளன.

ஃப்ளோரிடா துப்பாக்கிச்சூடு: கொலையாளியை தடுக்காத அதிகாரி

படத்தின் காப்புரிமை Reuters

ப்ளோரிடாவில் கடந்த வாரம் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது அக்கட்டடத்திற்கு வெளியே ஆயுதம் எந்திய அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார் என்றும் ஆனால் கொலையாளியை அவர் தடுக்கவில்லை என்றும் உள்ளூர் ஷெரிஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

பார்க்லான்டில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது ஸ்காட் பீட்டர்சன் என்ற அதிகாரி தனது சீருடையில் ஆயுதம் ஏந்தி அப்பள்ளி வளாகத்தில் இருந்ததாக ஷெரிஃப் இஸ்ரேல் கூறினார்.

இதுதொடர்பான வீடியோ பதிவில் துப்பாக்கிச் சூடு தொடங்கி 90வது விநாடியில் பீட்டர்சன் அங்கு வந்ததாகவும், ஆனால், நான்கு நிமிடங்கள் அவர் உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்ததாகவும், தாக்குதல் ஆறு நிமிடங்கள் நீடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்று கேட்டபோது, "உள்ளே சென்று கொலையாளியை எதிர்த்து தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றிருக்கவேண்டும்," என்று தெரிவித்தார் ஷெரிஃப்.

ஆனால், அதிகாரி பீட்டர்சன் இதற்கு இன்னும் எந்த பதிலையும் வெளிப்படையாக அளிக்கவில்லை.

ஆஸி: விமானத்தை வீழ்த்தும் முயற்சியை தடுக்க உதவிய இஸ்ரேல்

படத்தின் காப்புரிமை AFP

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்றை வீழ்த்த மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத முயற்சியைத் தடுக்க இஸ்ரேல் உதவி செய்ததாக, இரு நாடுகளும் உறுதிப்படுத்தி உள்ளன.

சிட்னியில் இருந்து அபுதாபிக்கு சென்ற எட்டிஹாட் விமான சேவையின் விமானத்தை வீழ்த்த முயன்றதாக இரண்டு சகோதரர்கள் மீது ஆஸ்திரேலிய காவல்துறை குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில், புதன்கிழமையன்று ஜெருசலேத்தில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ, "கற்பனை செய்துபார்க்க முடியாத படுகொலையை" தன் நாட்டு புலனாய்வு அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்