கேள்விக்குறியாகும் நவாஸ் ஷெரீஃபின் அரசியல் எதிர்காலம்

  • 24 பிப்ரவரி 2018

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய மிக முக்கியத் தீர்ப்பின்படி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் நிறுவன தலைவரும், நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்.

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/AFP/Getty Images

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டதால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த்து.

தனது சொத்து மற்றும் வருவாய் ஆதாரங்களைப் பற்றி விசாரணையில் நவாஸ் ஷெரீஃபால் நேரடியான மற்றும் தெளிவான பதில்களை கொடுக்க முடியவில்லை. பாகிஸ்தான் நாட்டின் அரசியலமைப்பு சாசனத்தின்படி நேர்மையற்ற எந்தவொரு நபரும் நாட்டை ஆள அனுமதிக்க முடியாது.

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, அரசு பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், கட்சித் தலைவர் உள்ளிட்ட வேறு பதவிகளை வகிக்க முடியாது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியாது என்னும் பாகிஸ்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1976-ல் உள்ள விதியை நீக்கி, அரசு ஊழியர் அல்லாத எவரும் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியும் என்று திருத்தம் செய்து தேர்தல் சீர்திருத்த மசோதா இயற்றப்பட்டது.

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/AFP/Getty Images

இந்த மசோதா பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபர் மம்னூன் உசேனின் ஒப்புதலைப் பெற்று தேர்தல் சீர்திருத்த சட்டம் 2017 என்ற சட்டமாக மாற்றப்பட்டது

அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் பதவிக்கு வந்தார். ஆனால் எதிர்கட்சிகள் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் (நவாஸ்) பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், பிரதமராக பதவியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, கட்சித் தலைவராக நவாஸ் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகிப் நிஸார், எந்தவொரு அரசு பதவிக்கும் தகுதியில்லாத ஒருவர் எப்படி அரசியல் கட்சிக்கு மட்டும் தலைமை வகிக்க தகுதி பெற்றவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

நவாஸ் ஷெரீஃப்க்கு நீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் ஆதாயம்

அந்த வழக்கில்தான் தற்போது உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பிரதமராக பதவிக்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்த பிறகு, கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் செல்லாது.

சுருக்கமாக, "கட்சித் தலைவராக அவர் பிறப்பித்த உத்தரவுகள், வெளியிட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் ஆவணங்கள் சட்டப்படி செல்லாது."

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கும் நவாஸ் ஷெரீஃப், தன்னை பதவியில் இருந்து மட்டுமல்ல, அரசியலில் இருந்தும் வெளியேற்றும் சதி இது என்று கூறுகிறார்.

ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு தான் எதிர்பார்த்ததுதான் என்றும் கூறுகிறார். இருந்தபோதிலும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் செனட் (நாடாளுமன்ற) தேர்தலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் அஞ்சுகின்றனர். தேர்தல் தள்ளிப்போகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை SS MIRZA/AFP/Getty Images
Image caption பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ராஹில் ஷெரீஃப் மற்றும் நவாஸ் ஷெரீஃப்

அரசியல் நெருக்கடி ஆழமாகலாம்

நவாஸ் ஷெரீஃபின் அரசியல் எதிர்காலத்தை நாடாளுமன்ற தேர்தல்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாடாளுமன்ற கீழவையில் நவாஸின் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.

இப்போது அவரது கட்சி தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால் கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் சாத்தியங்கள் பிரகாசமாக காணப்படுகிறது. அப்போது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்பு ஷெரீஃப் தகுதியுடைவர் என்று அறிவிக்கப்படலாம்.

நவாஸ் ஷெரீஃப் அரசியல் கட்சித் தலைவராக எடுத்த முடிவுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் நியமனங்களும் செல்லாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பற்றி சட்ட வல்லுனர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. தற்போது உச்ச நீதிமன்றம் சுருக்கமான தீர்ப்பு மட்டுமே வழங்கியிருக்கிறது, எதிர்வரும் நாட்களில் நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்கும்போது, இந்த அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான சில முக்கியமான வாய்ப்புகள் இருக்கலாம், அது நவாஸ் ஷெரீஃபின் அரசியல் எதிர்காலத்திற்கு ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கும் சாத்தியங்களும் உண்டு.

நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அவரும், அவரது மகளும், அரசியல் வாரிசுமான மரியம் நவாஸ் ஷெரிஃப், தொடர்ந்து நீதிபதிகளிடமும் நீதித்துறையினரிடம் ஆலோசித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA/SHAHZAIB AKBER

வியாழன்று இஸ்லாமாபாத்தில் ஊடகங்களிடம் பேசிய முன்னாள் பிரதமர், நீதிமன்ற தீர்ப்பு "நவாஸ் ஷெரீப்"க்கு மட்டுமே வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

"முன்னர் எடுக்கப்பட்ட முடிவைப் போலவே, நாட்டையும் கட்சியையும் வழிநடத்தச் செய்யும் எனது உரிமையை பறித்துவிட்டனர், தற்போது என்னை அரசியலில் இருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

ஆனால், நீதிபதிகளுடன் நவாஸ் ஷெரிஃப்க்கும் இடையிலான இந்த புதிய மோதல், கட்சி உறுப்பினர்களை இணைக்க உதவுகிறது என்று பலர் நம்புகின்றனர். எனவே முன்னாள் பிரதமருக்கு வாக்காளர்களிடையே அனுதாபம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

கட்சித் தலைமைக்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பை, நவாஸ் ஷெரீப் பொதுமக்களிடையே நடத்தும் பேரணிகளில் எடுத்துச் செல்கிறார். தனது வாக்காளர்களிடம் அதை குறிப்பிட்ட அளவிற்கு எடுத்துச் செல்வதிலும் அவர் வெற்றிப் பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

படத்தின் காப்புரிமை EPA/RAHAT DAR
Image caption இம்ரான் கான்

இதற்கு முன்னரும், அரசு பதவியில் இருக்க சில அரசியல்வாதிகள் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர் சோஹேல் வராயிச் நம்புகிறார். ஆனால் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவதற்கு ஒருவர் தகுதியற்றவர் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்று அவர் கூறுகிறார்.

"இது ஒரு புதிய உதாரணம், அரசியல் கட்சிகள் இதை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றன என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும். தனது தலைவரின் நேர்மையை கேள்வி எழுப்புவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை பார்க்க வேண்டும். அல்லது அதை மாற்ற முயற்சி செய்கின்றனரா என்று பார்க்கவேண்டும்" என்று அவர் கருதுகிறார்,

"பாகிஸ்தான் அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீர்ப்பின் நேரடியான பலன்கள் எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கும் அவருடைய கட்சிக்கும் வந்து சேருமா என்பது சந்தேகமே" என்கிறார் சோஹெல் வராயிச்.

படத்தின் காப்புரிமை REUTERS/Akhtar Soomro

நவாஸ் ஷெரீஃபின் அடுத்த நடவடிக்கை

சட்ட வல்லுநர் தாரிக் மஹ்மூத்தின் கருத்துப்படி, "நவாஸ் ஷெரீப் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வார். ஆனால், அவருக்கு அரசியல் ரீதியாக பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது".

"தற்போதைய நிலையில் பல்வேறு அமைப்புகளுக்கு இடையில் இந்த தீர்ப்பு வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஆட்டம் கண்டுவிட்டது" என்கிறார் அவர்.

இருந்தபோதிலும் தற்போது நாட்டில் அதிகாரம் பொருந்திய நீதித்துறை மற்றும் ராணுவம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான மோதல், நவாஸின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடாது என்று சோஹெல் வராயிச் நம்புகிறார்.

சோஹேலில் கருத்துப்படி, "தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் நவாஸ் ஷெரீஃப்பின் செல்வாக்கை மக்களிடம் இருந்து அவ்வளவு சீக்கிரம் பறித்துவிடமுடியாது."

"எதிர்வரும் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறவேண்டும் என்பதில் நவாஸ் தீவிரமாக இருப்பார். அப்போதுதான் அவரால் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரமுடியும். குறிப்பாக, நவாஸை கட்சித் தலைவராக்க சட்டத்திருத்தம் கொண்டு வந்த்துபோல், புதிய சட்டத்தையோ, வேறு சட்டத்திருத்தத்தையோ கொண்டு வர அவருக்கு பெரும்பான்மை பலம் அவசியம்" என்று கூறுகிறார் சோஹெல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :