வன்புணர்வை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள்

கற்பழிப்பை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள்

பட மூலாதாரம், AFP

தங்களது தாய் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுவதை நேரில் பார்ப்பதற்கு தெற்கு சூடானில் உள்ள சிறுவர்கள் வற்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு 40 அதிகாரிகள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சித்தரவதை செய்யப்பட்டு, சிதைக்கப்பட்டதுடன், மிகப் பெரிய அளவில் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

2015ல் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளபோதிலும், தெற்கு சூடானில் அரசாங்கப் பிரிவுகளுக்கு இடையேயான மோதல் தொடர்கிறது.

அட்டூழியங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட 40 மூத்த அதிகாரிகளில் 5 பேர் படைத்தளபதிகள் மற்றும் மூன்று பேர் மாநில கவர்னர்களாவர்.

அவர்கள் குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை என்றாலும், இதுகுறித்த விசாரணை நடைபெறும்போது அதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சம்வங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் அளித்த வாக்குமூலங்கள் வேதனையளிக்கும் வகையில் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களை வன்புணர்வு செய்யும்படி வற்புறுத்தப்பட்டவர்களின் சில வாக்குமூலங்கள், போஸ்னியாவை நினைவூட்டும் வகையில் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர் வாழ்வதற்காக தனது 12 வயது மகன் அவனது பாட்டியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டதாகவும், தன் கண்ணெதிரே தனது கணவருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்த ஒரு பெண்ணின் வாக்குமூலமும் அதில் ஒன்று.

இன்னொருவர் அவரது ஆண் தோழர் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சாகும் நிலையில் புதர்களில் கிடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"தென் சூடானில் ஆண்கள் மீதான பாலியல் வன்முறை ஆவணப்படுத்தப்பட்டதை விடவும் மிகவும் விரிவானது" என தெற்கு சூடானில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் யாஸ்மின் சூக் கூறுகிறார்.

இதுவரை தெரிந்திருப்பது ஒரு துளிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களில் உயிர் பிழைத்தவரான, லைன்யா கவுண்டியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண், அவர் எஸ்.பி.எல்.ஏ. தீவிரவாதிகள் எதிரணி ஆதரவாளர்களை கைது செய்ததையும், சித்திரவதை செய்து தலையைத் துண்டித்ததையும் பார்த்ததாக கூறியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களின் அழுகும் சடலங்களுடன் அவர் இருக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தப் பிணங்களில் ஒன்று அவளுடைய கணவருடையது.

"இனத் துன்புறுத்தலுக்கான தெளிவான செயல்முறை இங்கே இருக்கிறது" என்று தெற்கு சூடாலுள்ள மனித உரிமைகள் ஆணையரான ஆண்ட்ரூ கிளாப்ஹாம் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு,

தெற்கு சூடான்: உள்நாட்டுப் போரும் பட்டினிக் கொடுமையும்

"மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டிய அரசுப் படையினரே பெரும்பாலான குற்றங்களை இழைத்துள்ளதாக" அவர் மேலும் கூறினார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் கூட்டு சேர்ந்து தெற்கு சூடான் அதிகாரிகள் அமைக்கவுள்ள ஒரு புதிய நீதிமன்றத்துக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் ஆதாரங்களை எடுத்து செல்வதே தற்போதைய திட்டமாக உள்ளது.

ஆனால், தனது நாட்டு ராணுவத்தின் கூட்டாளிகளே குற்றம் இழைத்தவர்களில் முக்கியமானவர்களாக இருப்பதால், தெற்கு சூடான் அரசாங்கம் அந்த நீதிமன்றத்தை நிறுவுவதற்கான சாத்தியம் இல்லை என்று பிபிசி செய்தியாளர் வில் ராஸ் கூறுகிறார்.

ஐநாவின் அறிக்கையிலுள்ள பெரும்பாலான தகவல்கள் வெட்டி ஒட்டப்பட்டவையாக இருப்பதால் அதன் "உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக" தெற்கு சூடான் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், "நாங்கள் இந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்" என்று பிபிசியிடம் பேசிய செய்தித்தொடர்பாளரான அடேங் வெக் அடேங் தெரிவித்துள்ளார்.

"அந்த 40 அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் தகவலை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் அந்த 40 நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிபடுத்துவோம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :