அவமானப்படுத்தப்பட்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? - கனடா வாழ் தமிழர்கள் மற்றும் சீக்கியர்களின் கருத்து என்ன?

  • 26 பிப்ரவரி 2018
ஜஸ்டின் ட்ரூடோ படத்தின் காப்புரிமை Getty Images

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ `காலிஸ்தான்` தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதால்தான், இந்திய வருகையின்போது அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து கனடா வாழ் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இரண்டு வருடங்களுக்கு முன்பே கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் இந்திய பிரதமரின் அமைச்சரவையை விட சீக்கியர்கள் அதிகமாக உள்ளனர் என்று பெருமையாகக் கூறியபோது இந்த விவகாரத்தை கவனமாக கையாளுமாறு, கனடாவின் ஆங்கில பத்திரிகைகள் ட்ரூடோவுக்கு பரிந்துரைத்தனர்.

தற்போது ட்ரூடோ இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் சமயம் அவர் குறிப்பாக பிரிவினைவாத சீக்கியர்களிடம் பரிவு காட்டுபவராக தோன்றினார். கனடாவில் வாழ்ந்து வரும் சில தமிழ் மக்களை, இதைப்பற்றிய கருத்துக்காக பிபிசி அணுகியபோது அவர்களது கருத்துகளை கூறினார்கள்.

தொழில் முனைவோர் வாசன் ஸ்ரீனிவாசன் கூறியது, "கனடா பொதுவாக நடுநிலை நாடுகளில் ஒன்று. அப்படி இருக்கும்போது பிரிவினைவாதிகளின் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் மற்றும் ஆதரவு காட்டுதல் நாட்டிற்கும் அதன் அரசிற்கும் அழகில்லை. கடந்த 10 வருடங்களாகத்தான் 'காலிஸ்தான்' இயக்கம் அமைதியாக ஓய்வடைந்து இருக்கிறது. இப்பொழுது அதை எதற்கு கனடா கிளறிவிடுகிறது என்று புரியவில்லை,' என்றார்.

மேலும், “இதெல்லாம் போதாதென்று, இப்பொழுது இந்திய பயணத்தில் அட்வால் என்ற சீக்கியருடன் ட்ரூடோ புகைப்படம் எடுத்துக்கொண்டார். அட்வால் என்பவர் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் குடியேறியவர். பஞ்சாபிலிருந்து, கனடாவிற்கு, வந்திருந்த மந்திரியை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக 20 வருடங்கள் சிறையில் இருந்தவர். முதல் கேள்வி அட்வாலுக்கு இந்திய விசா எப்படி கிடைத்தது??" என்றார்.

"மோடி இப்படி செய்தது சரி தான்." என்றும் அட்வால் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

சூசன் பாலா என்பவர், "பிரதமர் மோடி நெறிமுறைப்படி ட்ரூடோவிற்கு நல்வருகை தந்திருக்க வேண்டும்," என்றார். " இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போனது. ஒரு சாதாரண சிறிய நிலையில் இருக்கும் மந்திரியை அனுப்பியதில் இந்தியா சரியாக செயல்படவில்லை. மேலும் எல்லா விஷயங்களையும் ட்விட்டர் மூலம் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் இந்திய பிரதமர் ஆறு நாட்கள் வரையில் ட்ரூடோ பற்றி மெளனமாக இருந்து தனது அதிருப்தியை இப்படி பகிரங்கமாக காட்டியிருக்க வேண்டாம்,' என்றும் கூறினார்.

பயண முகவராக பணியாற்றும் ஷங்கர் பாலகிருஷ்ணன், " கனடாவில் பல சீக்கியர்கள் இன்றும் தங்களை இந்தியன் என்று அடையாளம் காட்டிக்கொள்வதைவிட பஞ்சாப் நாட்டை சேர்த்தவர் என்று கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். காலிஸ்தான் இன்னமும் அவர்களுக்கு விரும்பிய கனவாகவே இருக்கிறது."

பிரதமர் மோடி பிரதமர் ட்ரூடோவிற்கு தனது பிரத்யேக பாணியில் வரவேற்பு அளிக்காததை பற்றி, "இதை நான் அவமதிப்பு என்று கருத மாட்டேன். இந்திய அரசு இதை மறைமுகமாக கனடாவை கண்டிப்பதின் அடையாளமாகத்தான் கருதுகிறேன்," என்றார்.

படத்தின் காப்புரிமை AFP

12 வயதில் கனடாவிற்கு வந்த கிருத்திகா சுகி, இன்று முதுகலை பட்டதில் இருக்கும் மாணவி, "பிரதமர் மோடி ஏன் இப்படி செய்தார் என்று புரியவில்லை. கனடாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள். பல ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கனடாவிற்கு வந்துக்கொண்டே இருக்கிறார்கள். ட்ரூடோ இந்தியாவிற்கு மனைவி குழந்தைகளுடன் வந்திருக்கும் போது வழக்கமான ஆடம்பர விருந்தோம்பல்தான் கொடுத்திருக்க வேண்டும். இந்த மாதிரி புறக்கணித்தலால் இந்தியாவை பற்றி மற்ற நாடுகள் என்ன நினைப்பார்களோ! அதற்கு பதிலாக நல்ல வருகை தந்து மோடியும் ட்ரூடோவும் இதை பற்றி தீவிரமாக பேசி இருக்கவேண்டும்," என்றார்.

சீக்கியர்கள் கருத்து என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே, காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுத்த சீக்கிய பிரிவினைவாதிகளின் கோஷம், கனடாவில் இன்னும் அவர்களது ஆதரவு வானொலிப் பிரசாரம் மூலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியப் பயணம் குறித்து கனடாவில் உள்ள சீக்கியர்களின் கருத்துக்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களில் சிலரிடம் பேசினோம்.

"வருடங்கள் கடந்தாலும், இன்றும் தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு மாறவில்லை," என்கிறார் ரஸ்பால் சித்து. ஜபல்பூரில் பிறந்து வளர்ந்த சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரஸ்பால் 18  ஆண்டுகளாக கனடாவில் வசிக்கிறார்.

"பிரதமர் மோதி செய்தது சரியா என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஒரு தரப்பில் பார்த்தால் எதற்கு இன்னமும் தனி நாட்டை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று தோன்றுகிறது. பிரிவினைவாதிகளுக்கு ட்ரூடோ அங்கீகாரம் தரக்  கூடாது. அவர் தருவதினால் தானே மோடியும் கண்டிப்பாக இருக்கிறார்.  ஆனால் நானே  1984  கலவரத்தின் போது அம்ரித்சரில் 14  நாட்கள் சிக்கி இருந்தேன். என் கண்முன்னாடியே பல வெடிகுண்டு சம்பவங்களை பார்த்திருக்கேன். நிறைய சீக்கியர்களை காயங்களுடனும் பிணமாகவும் எடுத்து செல்வதை பார்த்திருக்கேன். அதை தொடர்ந்த கலவரங்கள் மற்ற இடங்களுக்கும் பரவி ஜபல்பூரிலும் ரொம்ப மோசமாக நடந்தது. நாங்களே 13  குடும்பங்களுக்கு அந்த சமயத்தில் அடைக்கலம் தந்திருக்கிறோம். இதை எப்படி மறக்க முடியும்? கனடாவிற்கு இடம்பெயர்த்திருக்கும் சீக்கியர்கள் இன்றும் தனி நாட்டை தான் விரும்புகிறார்கள். ஆனால் கலவரங்கைளை நேரில் அனுபவிக்காத கனடாவிலேயே பிறந்த என்  மகளுக்கும் அவள் தலைமுறையினருக்கும் மோடி செய்தது சிறுபிள்ளை தனம், ட்ரூடோ செய்வதும் மிகத் தவறு என்று தோன்றுகிறது" என்கிறார்.

ஹர்மன் என்ற பஞ்சாபி இளைஞர்," 40  ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை இன்னமும் புதுப்பித்து கொண்டிருந்தால் வெறுப்புதான் அதிகரிக்கும். இந்திய நாடு ஒன்று. எத்தனை முயற்சித்தாலும் நாட்டை பிரிக்க முடியாது. கொலை கொள்ளை ரத்த ஆறு இது தான் மிஞ்சும். மோடியின் மௌனம் மூலம்தான் ட்ரூடோ சிறிது பின்வாங்கியிருக்கார்," என்றார். "ஆதலால் மோடி வரவேற்பை குறைத்துக் கொண்டது நல்லதுதான், " என்றும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்