சீன அதிபரின் பதவிக் காலத்தை அளவின்றி அதிகரிக்க முடிவு

சீன அதிபரின் பதவிக்காலத்தை அளவின்றி அதிகரிக்க முடிவு

பட மூலாதாரம், EPA

சீனாவின் அதிபராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதியை நீக்குவதற்கு அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரை செய்துள்ளது.

இந்த நடவடிக்கையானது தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் முடிவுற்றாலும் அவர் நாட்டின் அதிபராக தொடர்வதற்கு அனுமதிக்கும்.

ஷி ஜின்பிங் தனது பதவிக் காலத்தை 2023 ஆம் ஆண்டிற்கு மேலாகவும் நீட்டித்துக்கொள்வார் என்று பரவலாக பேசப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த கட்சியின் ஆண்டு கூட்டத்தில், மாவோ சே துங் காலத்திற்குப் பிறகு மிகுந்த சக்தி வாய்ந்த தலைவராக தன்னை நிலைநாட்டிக்கொண்டார்.

கட்சியின் கூட்டத்தில் இவரது சித்தாந்தங்கள் குறித்து பெரியளவில் பேசப்பட்டதே தவிர, அடுத்த தலைவர் குறித்த அறிவிப்பேதும் வெளியிடப்படவில்லை.

சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரின் மகனான ஷி ஜின்பிங் 1953ஆம் ஆண்டு பிறந்தார். கடந்த 1974ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்த இவர், பல்வேறு பதவிகளை கடந்து 2013ல் அதிபர் பதவியை அடைந்தார்.

இவரது ஆட்சியின் கீழ் பொருளாதார சீர்திருத்தமும், ஊழலுக்கெதிரான கடுமையான பிரசாரமும் நடைபெற்றது. மேலும் தேசியவாதத்தில் புது எழுச்சி ஏற்பட்டதோடு, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

நடவடிக்கையின் தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், Reuters

இதுகுறித்த அறிவிப்புகள் சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமையான சின்ஹுவாவில் ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்துள்ளது.

சீன மக்கள் குடியரசின் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளை ஒருவர் "இரண்டு ஐந்தாண்டுகளுக்கு மேல் வகிக்கக் கூடாது" என்ற சட்டவிதியை நீக்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு முடிவெடுத்துள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு,

'ஷி ஜின்பிங் கோட்பாடு' என்பது என்ன?

மேற்குறிப்பிடப்பட்டுள்ளதை தவிர்த்து வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முழுமையான பரிந்துரை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது.

கட்சியின் உயர்மட்ட குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திங்கட்கிழமையன்று பெய்ஜிங்கில் கூடி விவாதிக்கவுள்ளனர்.

இந்த பரிந்துரை சீனாவின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படால்தான் நடைமுறைப்படுத்த முடியும். வரும் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் இந்தாண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த பரிந்துரை முறையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :