சிரியா போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா?

  • 27 பிப்ரவரி 2018
படத்தின் காப்புரிமை Getty Images

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

"எவ்வித தாமதமுமின்றி" 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட பிறகு வான் தாக்குதல் மட்டுமல்லாது, தரைத் தாக்குதலும் நடந்துள்ளது.

தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை சிரியா அரசாங்கம் மதித்து செயல்படுமாறு வலியுறுத்த வேண்டுமென்று ரஷ்யாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியது.

படத்தின் காப்புரிமை AFP

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவ வேண்டுமென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கூட்டு தொலைபேசி உரையாடல் மூலமாக ஜெர்மயின் அதிபர் ஏங்கலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் கேட்டுகொண்டனர்.

தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்ட 30 நாள் போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு அவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், மிகப் பெரிய ஜிகாதி குழுக்களும் அவர்களின் கூட்டாளிகளும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் கீழ் வரவில்லை.

சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகியுள்ள கிழக்கு கூட்டா பிராந்தியம்தான் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி மிக முக்கிய பிராந்தியமாகும்.

கடந்த ஞாயிறன்று என்ன நடந்தது?

தற்காலிக போர்நிறுத்த தீர்மனம் ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னரும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு கூட்டா மீது அரசு படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்களில், குறைந்தது 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், கிழக்கு கூட்டாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று பல அரசு வீரர்களை கொன்றதாக தெரிவித்துள்ளது.

கிழக்கு கூட்டாவிற்குள் நுழைய சிரியப் படைகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக எதிர்கட்சி மற்றும் அரசு சார்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை EPA

அரசாங்கம் எடுக்கும் பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சி குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், போர்நிறுத்தத்தை "கடைபிடிப்பதாக" இரான் கூறியுள்ளது. ஆனால் இதன்கீழ் வராத டமாஸ்கசை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ரசாயன தாக்குதல் நடைபெற்றதா?

ரசாயன தாக்குதலால் பாதிக்கப்பட்ட அறிகுறிகளோடு சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிவாரண அமைப்பான சிரிய அமெரிக்க மருத்துவ சங்கம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இதனால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தன்னுடைய சக ஊழியர் ஒருவர், மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார் என்றும், அங்கு ஒரு சிறுவன் "ரசாயன தாக்குதலால் மூச்சு திணறி இருந்ததாகவும் கிழக்கு கூட்டாவில் வசிக்கும் மொஹமத் அடேல் தெரிவித்தார்.

இது போன்ற தகவலை தாங்களும் பெற்றுள்ளதாக கூறியுள்ள சிரிய கண்காணிப்புக் குழு, அங்கு எரிவாயு தாக்குதல் நிகழ்ந்ததா என்பதை இதுவரை உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கைகள் சுதந்திரமாக சரிபார்க்க முடியவில்லை. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசாங்கம் கூறி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

எனினும், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியன்று வட-மேற்கு நகரமான கான் ஷேக்ஹூன் நகரத்தில் நிகழ்ந்த கொடிய ரசாயன தாக்குதலுக்கு சிரிய அரசாங்கம்தான் காரணம் என கடந்த அக்டோபரில் ஐ.நா முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கூட்டாவின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது?

கிழக்கு கூட்டாவை "பூமியின் நரகம்" என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார்.

மனிதாபிமானமற்ற வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என போப் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். டமாஸ்கஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுமக்களை தாக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :