திருமணங்களால் அழிவின் விளிம்புக்கு சென்ற பழங்குடியின மொழி

உலகில் மூவர் மட்டுமே பேசும் ஒரு மொழியின் சில வார்த்தைகளை கற்றுக் கொள்ள உங்களுக்கு விருப்பமா?

Image caption பதேசி மொழியை பேசும் மூவர்

பதேசி. பனி படர்ந்த மலைகள் நிறைந்த வடக்கு பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இந்த மொழி பரவலாக பேசப்பட்டது.

ஆனால், இப்போது அந்த மொழி அழிவின் விளிம்பில் உள்ளது.

உலக மொழிகளை பட்டியலிட்டுள்ள எத்னோலாக் என்ற அமைப்பு, கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த மொழியை யாரும் பயன்படுத்துவதில்லை என்கிறது.

ஆனால், பிஷிகிராம் பள்ளதாக்கில், மூன்று பேர் இந்த பதேசி மொழியை பேசுவதை கண்டுபிடித்தோம்.

"ஒரு தலைமுறைக்கு முன்பு, பதேசி மொழி இந்த கிராமம் முழுவதும் பேசப்பட்டது. ஆனால் அது அனைத்தும் இப்போது இறந்த காலம் ஆகிவிட்டது." என்கிறார் ரஹிம் குல்.

அவருடைய வயது என்ன என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால், அவர் தோற்றத்தை காணும் போது, அவர் 70 வயது மதிக்கதக்கவராக தெரிகிறார்.

என்ன காரணம்?

ரஹிம் குல், "நாங்கள் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பெண் எடுத்தோம். அவர்கள் டோர்வாலி மொழிதான் பேசுவார்கள். மெல்ல எங்கள் குழந்தைகளும் அவர்களின் தாய்மொழியான டோர்வாலி மொழியை பேசத் தொடங்கினார்கள். இப்படியாக எங்கள் மொழி மெல்ல அழிந்தது." என்கிறார்.

இப்போது எங்கள் குழந்தைகளும், அவர்களின் குழந்தைகளும் டோர்வாலி மொழியில்தான் பேசிக் கொள்கிறார்கள். பின் நாங்கள் யாருடன் எங்கள் மொழியான பதேசி மொழியில் பேசுவது என்று கேள்வி எழுப்புகிறார் ரஹீம் குல்லின் உறவினரான குல்.

டோர்வாலிதான் அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், இதில் என்ன விஷயம் என்றால், இப்போது அந்த மொழியே பாஷ்தோ மொழியினால் கடும் நெருக்கடியில் இருக்கிறது.

அந்தப் பகுதியில் எந்த வேலைவாய்ப்புகளும் இல்லை. அதனால் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஸ்வாட் மாவட்டத்தில் அதிக நேரத்தை செலவிட நேரிடுகிறது. அங்கு அதிகம் பயன்படுத்தப்படுவது பாஷ்தோ மொழிதான். அங்குதான் இம்மக்கள் பாஷ்தோ மொழியை கற்கிறார்கள்.

மெல்ல அழியும் மொழி

ஒரு மொழி தொடர்ந்து பேச்சு வழக்கில் இருந்தால்தானே அந்த மொழி உயிர்ப்புடன் இருக்கும். இப்போது பதேசி மொழியை யாருடன் பேசுவது என்று இந்த மூவருக்கும் தெரியவில்லை. அதனால், இவர்களும் அம்மொழியை மெல்ல மறந்து வருகிறார்கள்.

இந்த மூவருக்குள் பேசிக்கொள்ளும்போதும், இவர்கள் ஓரிரு வார்த்தைகளை மறந்து விடுகிறார்களாம். பிறர் நினைவூட்டிய பின்பே அந்த வார்த்தைகள் இவர்கள் நினைவுக்கு வருகிறதாம்.

ரஹிம் குல்லுக்கு ஒரு மகன் உள்ளார். அந்த மகனுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், இந்த குழந்தைகள் அனைவரும் டோர்வாலி மொழியில்தான் பேசிக் கொள்கிறார்கள்.

வருந்தும் மக்கள்

ரஹிம் குல்லின் மகன்,"என் அம்மா டோர்வாலி மொழிதான் பேசுபவர். என் அப்பாவுடனும் அவர் அந்த மொழியில்தான் உரையாடுவார். அவர்கள் எப்போதும் பதேசி மொழியை பேசிக்கொண்டதில்லை. அதனால், சிறுவயது முதலே நான் பதேசி மொழியை பேசியதில்லை. எனக்கு சில வர்த்தைகள் வேண்டுமானால் தெரியும். ஆனால், முழுமையாக மொழி தெரியாது. என் குழந்தைகளும் டோர்வாலி மொழியைதான் பேசுகிறார்கள்" என்கிறார்.

"ஆம். எனக்கு வருத்தமாகதான் உள்ளது. ஆனால், என்ன செய்வது? இப்போது எனக்கு 32 வயது ஆகிறது. இனி அந்த மொழியை என்னால் கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஆனால், என் தந்தையுடன் இந்த மொழியும் இறந்துவிடும் என்று நினைக்கும்போது சோகத்தின் எல்லைக்கே சென்று விடுகிறேன்"என்கிறார்.

இந்தோ-ஆர்யன் மொழி

பாகிஸ்தானில் அழிந்து வரும் மொழிகளை காக்கவும், அதனை பரவலாக்கவும் ஃபாரம் ஃபார் லாங்வேஜ் என்ற அரசு சாரா அமைப்பு இயங்கிவருகிறது. இதனுடன் சேர்ந்து இயங்கி வருகிறார் மொழியியலாளர் சாகர் ஜமான்.

அவர், "நான் அந்த பள்ளதாக்கிற்கு மூன்று முறை பயணம் செய்துள்ளேன். அனால், அவர்கள் என் முன்னால் அவர்கள் மொழியை பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள்." என்கிறார்.

நானும் பிற மொழியலாளர்களும் இந்த மொழியின் வார்த்தைகளை ஆய்வு செய்தபோது, இது இந்தோ - ஆரியன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக இருக்கலாம் என்பதை கண்டுபிடித்தோம் என்கிறார் சாகர்.

இந்த கட்டுரையின் முதல் பத்தியில், பதேசி மொழியின் சில வார்த்தைகளை கற்றுக் கொள்ள உங்களுக்கு விருப்பமா... என்று கேட்டு இருந்தோம் தானே?

இதோ அந்த சில வார்த்தைகள்

  • மீன் நாஓ ரஹிம் குல் தி - என் பெயர் ரஹிம் குல்
  • மீன் பதேசி ஜிபே ஆசா - நான் பதேசி பேசுவேன்
  • தீன் ஹால் கலே தி? - எவ்வாறு இருக்கிறீர்கள்?
  • மே க்ரோட் கெக்டி - நான் சாப்பிட்டுவிட்டேன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்