சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்

ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

A woman carries boxes of humanitarian aid supplied by Unicef at a refugee camp in Syria's north-eastern Hassakeh province on February 26, 2018

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உள்நாட்டு போரால் சிரியாவில் பல மில்லியன் மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உணவு மற்றும் மீட்புதவிகளை வழங்க, தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு, உதவிகளை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் கூறுவதாக மீட்புதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

எச்சரிக்கையையும் மீறி இத்தகைய சுரண்டல்கள் சிரியாவின் தெற்கில் நடப்பதாக 'வாய்சஸ் ஃப்ரம் சிரியா 2018' (Voices from Syria 2018) எனும் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

'கண்டுகொள்ளாத தொண்டு அமைப்புகள்'

தாங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்கியே உதவிப் பொருட்களைப் பெற்று வந்ததாக பிறர் கருதுவார்கள் என்பதால் பல பெண்கள் உதவி மையங்களுக்கு செல்வதையே தவிர்க்கின்றனர் என்று மீட்புதவிப் பணியாளர்கள் பிபிசியிடம் கூறினர்.

தங்களுடன் தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் மட்டுமே உதவிப் பொருட்களை வழங்க முடியும் என்பதால், சில தொண்டு அமைப்புகள் பெண்கள் மீதான இந்த சுரண்டல்களைக் கண்டுகொள்வதில்லை என்று டேனியல் ஸ்பென்சர் எனும் மீட்புதவிப் பணியாளர் கூறினார்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் பலவற்றிலும் மனிதாபிமான உதவிகளுக்காக பெண்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்க பணிக்கப்படுவதாக ஐ.நாவின் மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

The UNHCR says prevention measures and reporting processes have been stepped up

'குறுகிய காலத் திருமணம்'

உணவு மற்றும் தங்குமிடம் தேவைப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகாரிகளின் பாலியல் தேவைகளுக்காக குறுகிய காலம் திருமணம் செய்துகொள்வது, உதவிப் பொருட்களை விநியோகிக்கும் ஆண்கள், பெண்களின் தொலைபேசி எண்களைப் பெறுவது, அவர்களை அவர்களது வீடுகளில் கொண்டு சேர்ப்பதற்காக 'வேறு சிலவற்றை' அவர்களிடம் இருந்து பெறுவது உள்ளிட்டவை வாய்சஸ் ஃப்ரம் சிரியா 2018 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆண் பாதுகாவலர்கள் இல்லாத, கணவரை இழந்த பெண்கள், மண முறிவு செய்துகொண்டவர்கள், உள்நாட்டுப் போரால் வேறு இடங்களில் சென்று வசிப்பவர்கள் ஆகியோரே எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஜோர்டானில் உள்ள சிரியா அகதிகள் முகாம் ஒன்றில் கடந்த மாட்ச் 2015இல் முதல் முறையாக இத்தகைய கதைகளைக் கேட்டதாக டேனியல் ஸ்பென்சர் கூறுகிறார்.

ஜூன் 2015இல் சர்வதேச மீட்புதவிக் குழு (International Rescue Committee) நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் 40% பேர் பாலியல் வன்முறை நடப்பதாகக் கூறினர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

படக்குறிப்பு,

டேனியல் ஸ்பென்சர்

"உதவிப் பொருட்களை வழங்காமல், அந்தப் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்கின்றனர்," என்று அவர் கூறுகிறார்.

கண்ணீர் சிந்தும் பெண்கள்

சில பெண்கள் தங்கள் அரையில் கண்ணீர் விடுவதை நேரில் கண்டுள்ள ஸ்பென்சர், அந்தப் பெண்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டவர்கள் என்ற முத்திரை குத்தப்படாமல் அந்த முகாம்களில் இருந்து வெளியேறுவது கடினம் என்கிறார்.

மேற்கண்ட இரு அறிக்கைகளையும் பிபிசி சார்பில் படிக்கப்பட்டது.

ஜூலை 2015இல் ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்த ஐ.நா மற்றும் பிற தொண்டு அமைப்புகளின் கூட்டத்தில் சர்வதேச மீட்புதவிக் குழுவின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சில அமைப்புகள் உதவிப் பொருட்களை விநியோகம் செய்வதற்கான தங்கள் நடைமுறைகளை இறுக்கமாக்கின.

அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பு

புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து கேர் (Care) எனும் தொண்டு அமைப்பு தங்கள் கண்காணிப்பை சிரியாவில் அதிகப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், EPA

ஐ.நா வின் அகதிகள் உயர் ஆணையம் (UN High Commissioner for Refugees ), மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN Office for the Co-ordination of Humanitarian Affairs) ஆகிய அமைப்புகளையும் தங்கள் கண்காணிப்பை பலப்படுத்தவும், புகார் தெரிவிப்பதற்காக நடைமுறைகளை எளிதாக்கவும் கேர் வலியுறுத்தியது.

எனினும், ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு செய்ய அந்த அமைப்புக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை.

'ஏழு ஆண்டுகளாகத் தொடர்கிறது'

"தெற்கு சிரியாவுக்கு நிவாரணம் சென்று சேர வேண்டும் எனும் நோக்கத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல்களை தொண்டு அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. அவை ஏழு ஆண்டுகளாகத் தொடர்கின்றன," என்று கூறுகிறார் ஸ்பென்சர்.

"ஐ.நா மற்றும் தற்போதைய மீட்புதவி அமைப்புமுறை ஆகியன பெண்களின் உடல்களைத் தியாகம் செய்து விட்டன," என்று குற்றம் சாட்டுகிறார் அவர்.

"எல்லைகள் கடந்து மீட்புதவிகள் வழங்கும்போது, கடுமையான பாலியல் சுரண்டல் நடப்பது குறித்த நம்பகத்தன்மை மிகுந்த தகவல்கள் உள்ளன. அவற்றை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா எவ்விதமான பலனளிக்கும் முயற்சிகளையும் செய்யவில்லை," என்று ஜூலை 2015இல் நடத்த ஐ.நா மற்றும் பிற தொண்டு அமைப்புகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

கேர் அமைப்பு மூலம் இந்த பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்களை பெற்றதாக ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். உள்ளூர் அளவில் செயல்படும் அமைப்புகள் மூலம் தாங்கள் உதவிப் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.

'பாலியல் சுரண்டலுக்கான வாய்ப்புகள் சிரியாவில் அதிகம்'

ஐ.நா குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். பாலியல் சுரண்டலுக்கான வாய்ப்புகள் சிரியாவில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் உள்ளூர் மக்களைக் கொண்ட புகார் அளிப்பதற்கான அமைப்பு முறையை உருவாக்கியுள்ளதாகவும், தங்கள் கூட்டாளி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

தாங்கள் உள்ளூர் அமைப்புகளுடன் 2015 வரை இணைந்து பணியாற்றியதாகவும் தற்போது அவ்வாறு செயல்படுவதில்லை என்றும் ஆக்ஸ்பேம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அந்தக் காலகட்டத்திலேயே இந்தக் குற்றச் சாட்டுகள் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும், அப்போது போதிய ஆதாரங்கள் தங்களிடம் இல்லையென்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரம் குறித்து மேலும் அறிய ஆய்வு ஒன்றைத் தொடங்கியுள்ளதாகவும், பெண்கள் மீதான பாலியல் சுரண்டலைத் தடுப்பது, புகார் அளிப்பது, உள்ளூர் அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"2015ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது"

இதனிடையயே பிபிசியின் செய்திக்கு ஐ.நாவின் துணை அமைப்புகள் தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தை சேர்ந்த ஆன்ட்ரே மஹேட்சிட்ச் அந்த குற்றச்சாட்டுகள் முழுமையற்றவை, ஆதாரமற்றவை மற்றும் உருவாக்கப்பட்டவை என்று கூறியுள்ளார்.

போர் நடக்கும் பகுதிகளில் நிலவும் சூழலை ஐ.நா கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்று கூறுவது மிகவும் எளிமையானது என்று கூறியுள்ள அவர் அந்த குற்றச்சாட்டுகள் வெளியான 2015ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

எவ்விதமான சுரண்டலையும் தாங்கள் பொறுத்துக்கொள்வதில்லை என்று ஐ.நா வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: