எகிப்து: 2,000 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில் கிடைத்த வாழ்த்துச் செய்தி

பல டஜன் கல் கல்லறைகளை கொண்ட பழங்கால எகிப்து சுடுகாடு ஒன்றில் பல ஆபரணங்கள் மற்றும் மண்ணால் ஆன கலைப் பொருட்கள் கிடைத்துள்ளன.

Ancient Egypt எகிப்து

பட மூலாதாரம், Reuters

தலைநகர் கெய்ரோவின் தெற்கே அமைந்துள்ள மின்யா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த சுடுகாடு சுமார் 2,000 ஆண்டு பழமையானது என்றும் அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடிக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சுடுகாட்டில் 40 கல் சவப்பெட்டிகள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள் மற்றும் தங்கத்தால் ஆன முகமூடி ஒன்று ஆகியன கண்டெடுக்கப்பட்டன என்று எகிப்து தொல்பொருள் துறை அமைச்சர் கலீத் அல்-எனானி கூறியுள்ளார்.

அந்தப் புதைகுழிகள் பிற்கால பாராக்களின் காலம் முதல் கி.மு 300 வரையிலான டோலோமைக் சகாப்தத்தின் காலம் வரையிலானவை என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

"இது புதிய கண்டுபிடிப்பு. மத்திய எகிப்தில் மேலும் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சேர்க்கப்போகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் எட்டு கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலவற்றை மண்ணுக்கு மேல் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த ஆய்வின் தலைவர் முஸ்தஃபா வாஜிரி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

"அந்தக் கல்லறைகள் தோத் எனும் பழங்கால எகிப்து கடவுளுக்கு பூசை செய்த மதகுருக்கள் அடக்கம் செய்யப்பட்டவை," என்று அவர் கூறினார்.

ஹோரஸ் எனும் கடவுளின் மகனின் முகத்தை போன்று செதுக்கப்பட்ட மூடிகளை உடைய ஜாடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், "அந்த ஜாடிகளுக்குள் பதப்படுத்தப்பட்ட உடல் உறுப்புகள் உள்ளன," என்று கூறினார்.

பட மூலாதாரம், EPA

அந்த ஜாடிகளுக்கு வெளியில் அவற்றினுள் யாருடைய உறுப்பு உள்ளதோ, அவர்களின் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

சித்திர எழுத்துக்களில் 'புத்தாண்டு வாழ்த்துகள்' என்று பொறிக்கப்பட்ட ஆரம் ஒன்று கடந்த ஆங்கில புத்தாண்டுக்கு முந்தைய தினமான, டிசம்பர் 31, 2017 அன்று கண்டெடுக்கப்பட்டது என்று கூறும் வாஜிரி, தற்செயலாக நிகழ்ந்தாலும், அந்த வினோதமான வாழ்த்து பழங்காலத்தில் இறந்தவர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்ததாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், EPA

இந்த மாதத்தின் தொடக்கத்தில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய மதகுருக்களின் கல்லறைகளை எகிப்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: