பாகிஸ்தானின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டதா சீன மொழி?

படத்தின் காப்புரிமை FAROOQ NAEEM/GETTY

கூற்று: சீன மொழியை தனது நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது.

உண்மை பகுப்பாய்வு முடிவு: இது தவறான தகவல்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் தனது நாட்டில் சீன மொழியை ஒரு பாடமாக கற்பிப்பதற்கு "பரிந்துரை" செய்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதே தவிர, சீன மொழியை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மொழியாக மாற்றுவதற்கு அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தானை சேர்ந்த உள்ளூர் உருதுமொழி தொலைக்காட்சியான "அப் டக்" தான் சீன மொழி பாகிஸ்தானின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதலில் செய்தி வெளியிட்டது.

இதுகுறித்து தீர்மானமானது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் செனட் சபையால் பிப்ரவரி 19ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மையாகவே பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. ஆனால், பாகிஸ்தான்-சீன பொருளாதார மண்டலத்துடன் (சிபிஇசி) தொடர்புடையவர்களுக்கு ஏற்படும் மொழிப் பிரச்சனையை குறைப்பதற்காக சீன மொழியை அதிகாரபூர்வமாக பயிற்றுவிக்கும் வகுப்புகளை தொடங்குவதற்காகவே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

சிபிஇசி என்றழைக்கப்படும் இந்த மிகப் பெரிய திட்டத்தின் மூலம் சீனா குறைந்தது 62 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்தது.

போலிச் செய்தி

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/GETTY

இந்த தவறான செய்தியை வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி முகமை, இந்தியா டுடே மற்றும் ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இந்திய ஊடகங்கள், பாகிஸ்தானுக்கு சீனாவுடன் அதிகமாகி வரும் நெருக்கத்தை இது காட்டுவதாகக் கூறின.

அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் போன்ற முக்கிய பிரதிநிதிகளும்கூட "அப் டக்கின்" இந்த போலிச் செய்தியை தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தனர். இந்தப் போலிச் செய்தி அதிவேகமாகப் பரவியதன் காரணமாக பாகிஸ்தான் செனட் சபை இது குறித்து விளக்கம் அளிக்க நேரிட்டது.

சில இந்திய ஊடகங்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டு, அந்த செய்தியை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா மட்டுமல்லாது இந்த போலிச் செய்தியானது சீனாவிலும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது. ஷாங்காய் அகாடமி ஆஃப் சோஷியல் சயின்சஸை சேர்ந்த பேராசிரியரான ஹு ஜியோங், இந்த அறிவிப்பு சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்