REALITY CHECK : சமூகவலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படங்களின் பின்னணி என்ன?
'தற்போது சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை', 'ஊடகங்கள் சிரியாவில் பாதிக்கப்படுபவர்களை புறக்கணிக்கின்றன' , 'சிரியாவில் மிகப்பெருமளவிலான கொலை நடந்திருக்கிறது' போன்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் பரவிவருகின்றன. இவை உண்மைதானா என்பது குறித்த பிபிசியின் ஆய்வு இது.
சிரியாவில் நிலைமை மோசமாக இருப்பது உண்மையான கூற்று. குறிப்பாக கிழக்கு கூட்டாவில். எனினும் இந்த செய்திகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல புகைப்படங்கள் சமீபமாக சிரியாவில் உள்ள சச்சரவுகளோடு தொடர்பில்லாததாக உள்ளன.
பலர் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இவை சிரியாவில் தற்போது எடுக்கப்பட்டவை என சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். ஆனால் அவற்றுக்கும் கடந்த வாரம் சிரியாவில் நடந்த சிரிய அரசுப் படைகளின் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லாததாக உள்ளன.
இது மே 27, 2003ஆம் ஆண்டில், இராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். மார்கோ டி லாரோ என்ற புகைப்படக் கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பள்ளியில், வெகுஜன கல்லறைகளில் காணப்பட்ட உடல்களை அடையாளம் காட்டுவதற்காக வைத்திருந்தனர். அல் முசய்யப் நகரில் ஒரு பாலைவனத்தில் இவை காணப்பட்டன என்று புகைப்படக்காரர் குறிப்பிட்டார்.
தெற்கு பாக்தாத்தில் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இராக்கியர்கள் காணாமல் போனதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1991 வளைகுடா போரைத் தொடர்ந்து ஷியா முஸ்லீம்களை சதாம் அரசு நசுக்கித்தள்ளியபோது தங்களது குடும்பத்தில் காணாமல் போன அண்ணன், தங்கை, அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்த எலும்புகூடு உடல்களில் தங்களின் சொந்தங்களை அடையாளம் காணமுடியுமா எனவும் தேடிப் பார்த்தனர்.
இந்த புகைப்படம் சமீபத்தில் சிரியாவின் கூட்டாவில் நடந்த தாக்குதலில் இறந்த குழந்தைகளின் படங்கள் என சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த புகைப்படம் ஆகஸ்ட் 21, 2013ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டதாகும்.
ஷாம் நியூஸ் நெட்வொர்க்கைச் சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் இதனை எடுத்துள்ளார். எதிராளியின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டா பகுதியில் சிரிய அரசு இரண்டு ரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியதில் பலர் இறந்தனர். எனினும் சிரியா அரசு இந்த ரசாயன தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்திருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த இறந்த உடல்களை பார்வையிட்டது. மேலும் இது குறித்து விரிவான அலசலையும் வெளியிட்டுள்ளது
துப்பாக்கி முனையில் இருக்கும் ஒரு குழந்தையின் இந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவிவருகிறது. இதுதான் சிரியாவில் உள்ள தற்போதைய நிலைமைக்கு சான்று என்ற தலைப்புடன் இந்த புகைப்படம் வலம்வருகிறது. இந்த புகைப்படத்துக்கும் தற்போதைய சிரிய தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை.
ஏப்ரல் 2014-இல் இப்புகைப்படம் வெளியிடப்பட்டது. சிரியாவில் பஷர் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்குழுவான சுதந்திர சிரியா ராணுவத்துக்கு ஆதரவான ஒரு நபர் இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக டெய்லி மெயில் ஏப்ரல் 21,2014 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த புகைப்படம் உண்மையானதாகவோ அல்லது பிரசார யுக்திக்காக பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம் என அந்த தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் தற்போதைய சிரியா தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்பு பணியினர் மீட்டுக்கொண்டிருப்பதற்கான ஆதாரம் என சமூக ஊடகங்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இது 2016 நவம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். சிரியாவில் அலெப்போ நகரில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அமீர் அல்ஹால்பே என்ற புகைப்படவியலாளர் இதனை எடுத்தாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது 2016-இல் கட்டட இடிபாட்டில் சிக்கியுள்ள ஒரு குழந்தையை மீட்கும் புகைப்படம் இது.
சமீபத்திய சிரியா தாக்குதலில் கடுமையாக காயமடைந்த ஒரு சிறுவனின் புகைப்படம் இது எனும் தலைப்புடன் வாட்ஸ் அப் முதலான சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. ஆனால் இது அக்டோபர் 4,2012 -இல் எடுக்கப்பட்டது.
தி டெலிகிராப் இணையதளம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மூன்றாம் தேதி அலெப்போ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு குழந்தையின் புகைப்படம் இது.
சிரியா தொடர்பாக மட்டுமல்ல வேறு பல விஷயங்களில் பல போலியான புகைப்படங்கள் வலம் வருகின்றன. அவற்றை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன் அது குறித்து இணையத்தில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை மறக்கவேண்டாம்.
பிற செய்திகள்
- சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்
- திருமணங்களால் அழிவின் விளிம்புக்கு சென்ற பழங்குடியின மொழி
- “பாகிஸ்தானில் சர்வாதிகாரத்தை சமாளிக்க ஸ்ரீதேவி எப்படி உதவினார்?”
- காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்