ஆப்பிரிக்கா: பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்

பர்கீனா ஃபாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரான்ஸ் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடி தரும் படையினர்.

அந்நாட்டுத் தலைநகர் வகாடூகூ-வில் துப்பாக்கிதாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய இரட்டைத் தாக்குதலுக்கு அங்குள்ள பிரான்ஸ் தூதரகமும், அந்நாட்டின் ராணுவத் தலைமையகமும் இலக்காயின.

தாக்குதலை அடுத்து மூண்ட துப்பாக்கிச் சண்டையில் எட்டு பாதுகாப்புப் படையினரும், தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த எட்டுபேரும் கொல்லப்பட்டனர்; பொதுமக்கள் உள்ளிட்ட 80 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பயங்கரவாதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் 'ஜாங் ஈவ் லெ ட்ரியான்'. எனினும் இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தாக்குதலுக்கு உள்ளான ராணுவத் தலைமையகத்தில் இருந்து தப்பித்து வெளியேறும் நபர்கள்.

ராணுவத் தலைமையகத்தின் மீது ஒரு தற்கொலைக் கார் குண்டு தாக்குதலும் நடந்ததாகவும், அங்கு நடைபெற்றுவந்த பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் பர்கீனா ஃபாசோ-வின் பாதுகாப்பு அமைச்சர் கிளமென்ட் சவாடோகோ கூறினார்.

இந்த தாக்குதலில் தலைமையகத்தின் ஓர் அறை சேதமடைந்ததாகவும் ஆனால், பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சுமார் 2 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட இந்த நாடு பிரான்ஸ் நாட்டின் காலனியாதிக்கத்தில் இருந்து 1960ம் ஆண்டு விடுதலை பெற்றது. எனினும் பிரான்சுடன் நல்ல நட்பில் இருக்கிறது இந்த நாடு.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இரட்டைத் தாக்குதலால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் வகாடூகூ.

வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யாரும் இறக்கவில்லை என்று லீ ட்ரியான் தெரிவித்துள்ளார். பர்கீனோ ஃபாசோவில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் தூதரகத்தின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும், பிரச்சினையான இடங்களில் இருந்து தள்ளி இருக்கும்படியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நாட்டில் உள்ள பிரான்ஸ் படையினரும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :