ஹாங்காங்: இட பற்றாக்குறையை தீர்க்கும் புதுமையான 'டியூப் வீடுகள்'

  • 5 மார்ச் 2018

வெறும் 106 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஹாங்காங்கின் மக்கள் தொகை 74 லட்சமாகும். எனவே, வாழ்வதற்கேற்ற இடத்தை பெறுவதில் பிரச்சனை என்பதோடு கிடைக்கும் வீடுகளின் விலையோ விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துகொண்டே வருவதால், அந்நகரவாசிகளுக்கு வீடொன்றை பெறுவது என்பதே கனவாக மாறி வருகிறது.

படத்தின் காப்புரிமை OPod/James Law Cybertecture

இந்நிலையில், ஹாங்காங்கை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் கான்கிரீட்டுகளால் செய்யப்பட்ட குழாய்களை சிறிய வீடுகளாக கட்டமைப்பதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். இதுபோன்ற வீடுகளை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு கட்டட வேலை நடைபெறும் பகுதியை போன்று தென்பட்டாலும், இது ஹாங்காங்கின் வீட்டு பிரச்சனையைக்கு தீர்வாக அமையலாம்.

மலிவுவிலை வீடுகளுக்கான தேடல்கள் ஏற்கனவே சில வினோதமான யோசனைகளையும், தீர்வுகளையும் தந்துள்ளது. சில கட்டடட வடிவமைப்பாளர்கள் "நானோ வீடுகள்" என்றழைக்கப்படும் மிகச் சிறிய வீடுகளை கட்டமைக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு வாகன நிறுத்துமிடத்தைவிட சிறிய 121 சதுர அடி கொண்ட ஒரு வீடு சமீபத்தில் 242,805 டாலர்களுக்கு ஹாங்காங்கில் விற்பனையாகியுள்ளது.

ஹாங்காங் எப்படி மிகச் சிறிய வீடுகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் பெயர்போன இடமாக மாறிவருகிறது என்று அந்நகரத்தை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரான ஜேம்ஸ் லா கூறுகிறார். "சூரிய வெளிச்சமற்ற, சரியான காற்றோட்டமற்ற, மிகவும் சிறியளவிலான வீடுகள் வெறும் 50 சதுர அடிகளில் கட்டப்படுகிறது" ஜேம்ஸ் கூறுகிறார்.

"மக்களால் ஒரு சாதாரண வீட்டிற்குரிய வாடகையை அளிக்கமுடியாது என்பதால் வீட்டு உரிமையாளர்கள் ஒரு வீட்டை பல சிறுபகுதிகளாக பிரித்து வாடகைக்கு விடுகிறார்கள்."

படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கூறிய எவற்றையுமே அணுகுவதற்கு இயலாத ஆயிரக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி கிட்டத்தட்ட கூண்டு போன்று காட்சியளிக்கும் 16 சதுர அடிகள் கொண்ட இடத்தை தங்களது வீடுகளாக கொண்டுள்ளார்கள்.

"கூண்டுகளை போன்ற இதுபோன்ற வீடுகள் மூன்று நிலைகளை கொண்ட படுக்கை அமைப்பை போன்றிருக்கும். உங்கள் வீட்டிற்குரிய பாதுகாப்பையும், தனியுரிமையையும் அளிக்கும் விதமாக உங்களது வீட்டை சுற்றி கம்பி வேலி போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒரு சிறைச்சாலையை போன்று அது காட்சியளிக்கும்" என்றும் "இது ஒரு முற்றிலும் மோசமான வாழ்க்கை" என்றும் ஜேம்ஸ் மேலும் கூறுகிறார்.

மிகச் சிறியளவிலான வீடுகளுக்கும் அதிகளவிலான வாடகையை அளிக்க வேண்டியுள்ளது. பாதியாக பிரிக்கப்பட்ட 50 முதல் 100 சதுர அடி கொண்ட ஒரு வீட்டிற்கு மாதத்திற்கு கிடத்தட்ட 300 முதல் 600 டாலர்களை வாடகையாக கொடுக்க வேண்டியுள்ளது. கூண்டுகளை போன்ற வீடுகளுக்கு கூட மாத வாடகையாக சுமார் 300 டாலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.

எனவே, இந்நிலைக்கு தீர்வளிக்கும் வழிமுறையை ஜேம்ஸ் எட்டியுள்ளார். இவரைப்போன்ற கட்டட வடடிவமைப்பாளர்கள் ஒரு வீட்டில் மீதமிருக்கும் இடத்தை பயன்படுத்துவதற்குரிய வழிவகைகளை கண்டறிவதற்கு முயற்சிக்கிறார்கள். அதுபோன்ற யோசனைகளில் ஒன்றுதான் ஓபாட் என்னும் கான்கிரீட் குழாய்களை கொண்டு உருவாக்கப்படும் மிகச் சிறியளவிலான வீடுகளாகும். இதுபோன்ற குழாய்கள் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்படும்போது பயன்படுத்தப்படாத இடைவெளிகள் வீணாவது தவிர்க்கப்படுகிறது. மேலும், கோபுரம் போன்ற அடுக்கடுக்கான வீடுகளை விரைவாக கட்டுவதற்குரிய வாய்ப்பையும் இம்முறை உருவாக்குகிறது.

படத்தின் காப்புரிமை OPod/James Law Cybertecture

இந்த வீடுகளை கட்டமைப்பதற்கு உபயோகிக்கப்படும் குழாய்கள் பொதுவாக புயல் நீர் வடிகால் குழாய்களாக பயன்படுத்தபடுபவை" என்று கூறும் ஜேம்ஸ், "அதிகளவில் வாங்கப்படும் இதுபோன்ற மிகப் பெரிய குழாய்கள் ஒருகட்டத்தில் தேவையற்ற நிலையை அடைவதால், குறைந்த அளவிலான பணத்தை கொடுத்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அவற்றை வாங்குவதுடன் மேலும் சிறிதளவு பணத்தை செலவழித்து மரச்சாமான்களை குளியலறை, சமையலறை மற்றும் சோபா பெட் போன்றவற்றையும் வைத்தால் ஒரு வீடு தயாராகிவிடும்" என்று விவரிக்கிறார்.

எதிர்காலத்தில் மாற்றியமைக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன, தொழில்துறை பாணியில் ஓபாடுகள் உள்ளன. ஹாங்காங்கின் வீட்டு நெருக்கடிக்கு இது ஒரு நீண்ட கால தீர்வு அல்ல என்று அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அது அவருடைய நோக்கம் அல்ல.

எந்த நிலையிலும் ஹாங்காங்கின் வீட்டு பிரச்சனைக்கு இந்த யோசனை முழு தீர்வளிக்கும் என்று நான் நினைத்ததில்லை என்றும் இதைத் தவிர்த்து நிலவும் பல்வேறு விதமான விடயங்களும் இந்த முழு பிரச்சனைக்கு காரணமென்றும் அவர் கூறுகிறார்.

வீடுகளின் விலையும், வாடகையும் அதிகமாக இருப்பதற்கு குறைந்தளவில் உள்ள நிலம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், இது பிரச்சனைக்கான ஒரே காரணமில்லை.

படத்தின் காப்புரிமை OPod/James Law Cybertecture

"ஹாங்காங் ஒரு மிகப் பெரிய நகரம். இந்நிலையில், எங்களுக்கு தேவையான அளவு நிலமில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை. மாபெரும் வீட்டு தோட்டங்களை கட்டியெழுப்ப பெரிய நிலப்பகுதி எங்களுக்கு இல்லை. அதற்கு தேவையான நிலப்பகுதிகளை நாங்கள் கடலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் நகரத்தை நீங்கள் பார்த்தீர்களானால் உண்மையாகவே பயன்படுத்தப்படாத நிலம் அதிகளவில் இருப்பதை உங்களால் காண முடியும். பல்லாண்டுகளாகவே மேம்பாலங்களுக்கு கீழும், கட்டடங்களின் மேலும், இடையிலும் நிலப்பகுதிகள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன."

நகர்ப்புற திட்டமிடுபவர்கள் வருங்காலத்தில் நகரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்தும், பிளவுகள் மற்றும் எஞ்சியுள்ள இடைவெளிகளில் ஓபாட் போன்ற வீடுகளை கட்டமைப்பது குறித்தும் சிந்திக்க வேண்டுமென்று கூறுகிறார்.

ஹாங்காங்கில் வாழ்க்கையை நடத்துவதற்கான செலவு அதிகரித்து வந்தாலும், அது ஊதிய உயர்வுடன் ஒப்பிடப்படுவதில்லை. அதற்குறிய தீர்வுகளை எட்டுவதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுவரை, இரவில் ஒரு கூண்டில் தங்க வேண்டியவர்கள் அங்கு இருப்பார்கள்.

இதர செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :