பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல் முறையாக தேர்வு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள தலித் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணா குமாரி என்பவர், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாழும் பாகிஸ்தானில் இந்து சமயத்தை சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கிருஷ்ணா குமாரி, "தார் பகுதியிலிருந்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகப்போகும் வாய்ப்பை பெறும் முதல் நபராக நான் இருப்பேன். இதற்கு காரணமான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பிளவால் பூட்டோ மற்றும் பார்யால் டல்பூர் ஆகியோருக்கு நன்றி கூறினால் மட்டும் போதாது" என்று அவர் கூறினார்.

கிருஷ்ணா குமாரி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் வறிய மாவட்டங்களில் ஒன்றிலுள்ள நகர்பார்க்கர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். கடந்த 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போரில் இவரது மூதாதையர்கள் ஈடுபட்டனர்.

அதன் பிறகு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிபிசியுடனான ஒரு நேர்காணலின்போது பேசிய அவர், நகர்பார்க்கரில் "கடந்த பல ஆண்டுகளாக வறட்சியான சூழல் நிலவுவதால், அங்கு வாழ்க்கையை முன்னெடுப்பது மிகவும் கடினமானது என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK @ AGHA.ARFATPATHAN.7

மிகவும் வறுமையான தலித் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணா தான்மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது இவரது தந்தை நிலவுரிமையாளர் ஒருவரால் சிறைபிடிக்கப்பட்டதால், மூன்றாண்டுகள் கொத்தடிமைகளாக வாழும் நிலை ஏற்பட்டதை நினைவுகூர்கிறார்.

கிஷு பாய் என்றும் அறியப்படும் கிருஷ்ணா குமாரிக்கு பதினாறு வயதிலேயே திருமணமானாலும், அவருடைய கணவர் உதவிகரமாக இருந்ததால் கல்வியை தொடர்ந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள கிருஷ்ணா, கடந்த இருபது வருடங்களாக தார் பகுதியிலுள்ள இளம்பெண்கள் கல்வியையும், சுகாதாரத்தையும் பெறுவதற்கு போராடி வருவதாக கூறுகிறார்.

"தார் பகுதியில் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. நான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அடைந்தபிறகு அந்நிலையை மாற்றுவதற்கு பணிபுரிய விரும்புகிறேன்."

"நான் இதற்கு முன்னரும்கூட பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். 2010 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மசோதா ஏற்படுத்தப்பட்டது முதல் பதினெட்டாம் சட்டத் திருத்தும் வரை பல்வேறு நிலைகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். கடைசியில் பெண்களின் கல்விக்காகவும், சுகாதாரத்துக்காகவும் போராடுவதற்குரிய களத்தை பெற்றுள்ளேன். நான் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதர செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :