புதிய திருப்பம்: தென் கொரிய பிரதிநிதிகளை சந்தித்தார் கிம் ஜோங்-உன்

  • 5 மார்ச் 2018
படத்தின் காப்புரிமை EPA

கடந்த 2011 ஆம் ஆண்டு கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவரானதிலிருந்து முதல் முறையாக, தென் கொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் இரவு உணவுடன் கூடிய சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

தென் கொரிய பிரதிநிதிகள் குழு திங்கட்கிழமையன்று வட கொரியாவை வந்தடைந்தவுடன் இந்த சந்திப்பை தென் கொரிய அதிபரின் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.

வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையை தொடங்க வைப்பதே தற்போது வட கொரியாவிலுள்ள 10 பேர் கொண்ட தென் கொரிய பிரதிநிதிகள் குழுவினரின் முக்கிய நோக்கமாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு வட மற்றும் தென் கொரியாவுக்கிடையேயான உறவில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிம் ஜோங்-உன்

எதிர்பார்க்கப்படாத இந்த சந்திப்பில் தென் கொரியாவின் புலனாய்வுத் துறை தலைவரான சூ ஹூன் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சுங் உய்-யோங் ஆகியோர் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுப்பயணத்தின்போது, வட கொரியாவை அதன் அணு சக்தித் திட்டங்களிலிருந்து பின்வாங்க வைப்பதும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை துவங்க வைப்பதும் தென் கொரிய பிரதிநிதி குழுவினரின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

கடந்த ஓராண்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சொன்னதும், செய்ததும்: 8 தகவல்கள்

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுங், தான் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னின், "கொரிய தீபகற்பத்தை அணுசக்தியில்லா இடமாக மாற்றுவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையேயான உறவை பேச்சுவார்த்தையின் மூலம் பலப்படுத்தும்" தீர்மானத்தை வட கொரிய தலைவரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே மட்டுமல்லாமல், வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கிடையேயான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெறுவதற்குரிய வகையிலான பல்வேறு விடயங்களை விரிவாக எடுத்துரைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

இதர செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :