பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்பு

  • 6 மார்ச் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டனை உளவு பார்த்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய்யுடன், பல்பொருள் அங்காடி ஒன்றின் மேசையில் மயக்க நிலையில் காணப்பட்ட மற்றொருவர் அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது.

30 வயதாகும் யூலியா ஸ்க்ரிபால் மற்றும் அவரது தந்தையான 66 வயதாகும் செர்கெய் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று வில்ட்ஷிர் என்னும் பகுதியில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

எந்த "தெரியாத பொருள்" இவர்கள் இருவரையும் மயக்க நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் அதிகாரிகளுக்கும் "சிறியளவிலான அறிகுறிக்காக" சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடப்பதற்கு காரணமான விடயத்தை பற்றி தன்னிடம் "தகவல் ஏதுமில்லை" என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், போலீசார் வேண்டுகோள் விடுக்கும்பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான ஸ்க்ரிபாலின் மனைவி, மகன் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்ததால், கடந்த 2010 ஆம் நடந்த "உளவாளிகள் இடமாற்ற" நிகழ்வை தொடர்ந்து பிரிட்டனால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

படத்தின் காப்புரிமை ASSOCIATED PRESS

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கொவ், இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்த துயரமான நிலைமையை கவனித்து வருகிறோம். ஆனால், அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும், அவர் என்ன செய்தார் என்பது பற்றிய தகவலும் எங்களிடம் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியிலுள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தின் கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

யார் இந்த செர்கெய் ஸ்க்ரிபால்?

ரஷ்ய ராணுவத்திலிருந்து ஓய்வுப் பெற்ற புலனாய்வு அதிகாரியான கோல் ஸ்க்ரிபால் கடந்த 2006 ஆம் ஆண்டு ரஷ்யாவால் 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்ஐ6 சார்ந்த ரகசியங்களை பெறுவதற்காக செயற்பட்டு கொண்டிருந்த ரஷ்ய உளவுத்துறை முகவர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்ததற்காக இவர் கைதுசெய்யப்பட்டார்.

எஃப்.பி.ஐயினால் கைது செய்யப்பட்ட 10 ரஷ்ய உளவாளிகள் விடுக்கப்பட்டதற்கு பதிலாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் செர்கெய் ஸ்க்ரிபால் உள்பட நான்கு உளவாளிகளை ரஷ்யா விடுவித்தது. அதன் பிறகு அவர் பிரிட்டனுக்கு சென்றுவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :