'லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் என அனைவரும் அகற்றப்பட வேண்டும்'

  • 7 மார்ச் 2018

"லெனின், ஸ்டாலின், மார்க்ஸ். என எல்லோரும் அகற்றப்பட வேண்டும். இந்த சிலைகள் எல்லாம் போய்விட்டன. இவர்களின் பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர்களும் விரைவில் போய்விடும்" என்று தெற்கு திரிபுராவில் பெலோனியாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருண் சந்திரா போவ்மிக் தெரிவித்திருக்கிறார்.

"இந்த தலைவர்களை பற்றி கூறுகின்ற பாடப் புத்தகங்களும் மாற்றப்படும். அவை நம்முடைய கலாசாரத்தின் ஒரு பகுதி அல்ல" என்று அவர் கூறுகிறார்.

'லெனினின் செயின்ட் பீட்ஸ்பர்க்' என்று முன்பு கருதப்பட்ட திரிபுராவின் தெற்கு பகுதியில் தற்போது, வடகிழக்கு இந்தியாவின் முன்னாள் கம்யூனிச கோட்டையிலுள்ள லெனின் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக தரைமட்டமாக்கப்படுகின்றன.

சமீபத்தில் திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வலது சாரி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக ஆட்சி செய்த கம்யூனிஸ்ட்கள் திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், மிக சிறியதொரு சின்பான்மை கட்சியாக மாறியுள்ள நிலையில், அவர்களின் கட்சி அலுவலகங்களையும், தொழிலாளர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

முதலில், தெற்கு திரிபுராவில் பெலோனியாவின் கல்லூரி சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை ஜேசிபி வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த தொகுதியில் 4 முறை வென்று வந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பசுதேப் மஜூம்தார் வெறுமனே 753 வாக்குகளில் போவ்மிக்கிடம் தோல்வியடைந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் போவ்மிக்கின் வெற்றியை கொண்டாடிய வெறித்தனமான கும்பல்கள் ஜேசிபி ஒன்றை எடுத்து லெனின் சிலையை தரைமட்டமாக்கியது.

கடந்த திங்கள்கிழமை மாலையும் தெற்கு திரிபுராவில், மாநிலத் தலைநகர் அகர்தலாவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சப்ரூமில் இன்னொரு லெனின் சிலையும் உடைக்கப்பட்டது.

திரிபுரா லெனின் சிலை உடைப்பு (காணொளி)

144-ஆவது பிரிவின்கீழ் அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோதும் சமாதானத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து கட்சிகளின் கூட்டம் பெலோனியா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.

சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீடுகளிலே முடங்கி கிடந்ததால் கடைகள் மூடப்பட்டிருந்தன. கல்லூரி சதுக்கத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரேயொரு கடை ஏறக்குறைய 30 வயதுடைய இளம் பெண்ணொருவரால் நடத்தப்படும் கடை ஒன்றுதான்.

கேமராவை பார்த்தவுடன் அந்தப் பெண்ணின் கூற்று, "நான் இங்கில்லை. என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் இங்கில்லை. நாங்கள் எதையும் பார்க்கவில்லை" என்பதுதான்.

போலீஸ் முகாம்களும், உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளரின் அலுவலகங்களும் இந்த இடத்திற்கு அடுத்துதான் அமைந்துள்ளன. மாவட்ட மஜிஸ்டிரேட் நீதிமன்றம் ஒன்று 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.

ஆனால், கும்பல்கள் கட்டுக்கடங்காத செயல்பாடுகளை தொடர்ந்ததாக இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட உள்ளூர் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

சில கெஜம் தொலைவில் இருக்கும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மூடப்பட்டு, கேட்பாரற்று உள்ளது.

இந்த இடத்தில், பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த அணியினரை பிபிசி செய்தியாளர் பார்த்தார். அவர்கள் வாகனத்தை நிறுத்தி அவர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டனர்.

அவர்களிடம் கேட்டபோதும், இந்த சிலை உடைப்பு சம்பவம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.

அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றவுடன், அந்த பைக்கில் சென்றவர்களில் சிலர் லெனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாக உள்ளூர் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

பெலோனியாவிலுள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

லெனின் சிலை இடிப்பில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் யாரும் ஈடுபடவில்லை என்று இந்த அலுவலகத்தை மேலாண்மை செயது வரும் ஷாந்தனு தத்தா தெரிவித்தார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் டிசர்ட்டுகளை அணிந்து, தங்களுடைய பெயரை கெடுத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

2014ம் ஆண்டு உக்ரைனில் பல சிலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த சிலைகள் மக்களின் வரிப்பணத்தால் கட்டப்பட்டன. உள்ளூர் நகராட்சிதான் இதனை கட்டியமைத்தது என்று மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திபான்கார் சென் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரிட்டிஷாரை அல்லது வலது சாரி கருத்தியல்களுக்கு எதிராக போராடிய பண்டிட் தீன் தயால் உபாத்யாய் போன்ற இந்திய தலைவர்களின் சிலைகளை பாரதிய ஜனதா கட்சி நிறுவப்போவதாக பெலோனியாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருண் சந்திர போல்மிக் தெரிவிக்கிறார்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு செய்ததை, ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட இன்னோரு அரசு அழிக்கும்" என்று ஆளுநர் டதாகாடா ராய் டுவிட்டர் செய்தி பதிவிட்டதோடு அனைத்து சம்பவங்களும் தொடங்கின என்று கம்யூனிஸ்ட்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்