உலகப் பார்வை: தாலிபன் பற்றி துப்பு கொடுக்க சன்மானம் அறிவித்த அமெரிக்கா

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

தாலிபன் பற்றிதுப்பு கொடுத்தால் சன்மானம்: அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முல்லா ஃபசுல்லா

பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா ஃபசுல்லா குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 32.5 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

பெஷாவர் நகரின் ஒரு பள்ளியில் 2014இல், 148 பேர் கொல்லப்பட்ட ஒரு தாக்குதல் உள்பட பல தாக்குதல்களில் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

பாகிஸ்தானிய தாலிபன் குழுவின் கிளை அமைப்பு ஒன்றின் தலைவரான அப்துல் வாலி மற்றும் நேட்டோ படை மீது தாக்குதல் நடத்திய ஒரு குழுவின் தலைவரான மங்கல் பாக் ஆகியோர் பற்றிய தகவல்களுக்கும் தலா 30 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 19.5 கோடி இந்திய ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: இறக்குமதி வரியை அதிகரித்த டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

தமது கட்சியினர் சிலரின் எதிர்ப்பையும் மீறி , வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு 10% மற்றும் 25% வரி விதித்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

நியாயமற்ற வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க தொழில்துறையை இந்த வரி மேம்படுத்தும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், இந்த அதிக அளவிலான வரிக்கு பல நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இந்த வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இரான்: தலையங்கியை கழற்றிய பெண்ணுக்கு சிறை

படத்தின் காப்புரிமை UNKNOWN

கட்டாயமாக தலையங்கி அணிய வேண்டும் எனும் சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் அதைக் கழற்றி போராட்டம் நடத்திய இரான் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண் மீது 'ஒழுக்கமற்ற செயல்களை ஊக்குவிக்கும்' குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி அப்பாஸ் ஜாஃப்ரி-தொலாதபாடி கூறியுள்ளார்.

11 நாடுகள் வர்த்தக ஒப்பந்தம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் பெரு ஆகிய 11 பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளும் ஒரு புதிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம், இந்த 11 நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கான வரி குறைக்கப்படும். தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச உத்தரவாதங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்