வட கொரிய - அமெரிக்க உறவில் மாற்றத்துக்கு காரணமானவர்கள் யார்?

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜாங் ஈ-யங் மற்றும் உளவுத்துறை தலைவர் சூ-ஹூன் ஆகியோரே காரணமாக பார்க்கப்படுகிறது.

இவர்கள் இருவரும்தான் கடந்த வாரம் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் அழைப்பின் பேரில் வட கொரியா சென்ற தென் கொரிய குழுவில் இடம்பெற்ற முக்கிய பிரதிநிதிகளாவர். அப்போது வட கொரியா அளித்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அவர்கள் பகிர்ந்ததன் காரணமாகவே தற்போது இருநாடுகளுக்கிடையேயான உறவில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னால் அந்நாட்டின் சிறப்பு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை பற்றி நமக்கு தெரிந்த தகவல்கள் என்னென்ன?

ஜாங் ஈ-யங்

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் 71 வயதான இவர், இத்துறையில் மிகுந்த அனுபவமும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்ட அனுபவமும் கொண்டவராவார்.

மூன் ஜே-இன்னின் அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளியுறவு கொள்கை ஆலோசகராக செயல்பட்ட இவர், 2017 ஆம் ஆண்டு மே மாதம் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கான "சிறந்த நபர்" என்று மூன் ஜே-இன்னால் இவர் கூறப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சூ ஹூன்

உளவுத் துறை தலைவரான 63 வயதாகும் சூ ஹூன், இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடப்பதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மற்றும் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு கொரிய நாடுகளுக்கிடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ரகசிய பேச்சுவார்த்தையை இவர் வட கொரியாவுடன் நடத்தினார்.

உயிரிழந்த வட கொரிய தலைவரான கிம் ஜோங்-இல்லை இவர் 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டிற்குட்டபட்ட காலத்தில் பலமுறை சந்தித்துள்ளார்.

இவர் கடந்த 1996 முதல் 1999 ஆம் ஆண்டிற்குட்பட்ட காலத்தில் கொரிய தீபகற்பத்தின் கூட்டு எரிசக்தி மேம்பாட்டு திட்டத்தின் (கீடோ) தலைவராக செயல்பட்டபோதுதான் வட கொரியவுடனான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் திறனை இவர் பெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :