டிரம்ப் - வட கொரியா பேச்சுவார்த்தை: 21ஆம் நூற்றாண்டின் அரசியல் சூதாட்டம்?

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் ஒரு ராஜதந்திர மேதை அல்லது தனது நாட்டை அழிக்கின்ற கம்யூனிஸ்டாக இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் தலைவர் அல்லது மிகவும் வஞ்சகமான விளையாட்டில் ஒரு சிப்பாயாக இருக்கிறார்.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு தலைவர்களை பற்றிய இந்த இருவேறு முரண்பட்ட பார்வைகள், நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ அந்தந்த நபர்களை பொறுத்து உங்களுக்கு கருத்துக்களாக கிடைக்கலாம்.

இந்த வரலாற்று காவியத்தில் இன்னொரு நடிகரும் உள்ளார். அவர்தான் இதுவரை நேரிடையாக அறிக்கை வெளியிடாமல் இருக்கின்ற வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன். இந்த சிறந்த அசாதாரணமான அரசியல் சூதாட்டங்களில் மிக முக்கிய ஆட்டககார்ராக கிம் ஜாங்-உன் இருக்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய புத்தாண்டு செய்தியில், தென் கொரியாவில் நடைபெறுகின்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு வட கொரியாவில் இருந்து பிரதிநிதி குழுவை அனுப்பப்போவதை அறிவித்த அந்த தருணத்தில் இருந்து, கிம் ஜாங்-உன் தன்னுடைய மிகவும் சிக்கலான பிரசார வரைவுகளை சிறப்பாக திட்டமிட்டிருப்பது மிகவும் தெளிவாக தெரிந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவும், வட கொரியாவும் ஒன்றுக்கொன்று வெளிப்படையாக வார்த்தைப்போர் நடத்திய ஓராண்டுக்கு பின்னர், அதிபர் டிரம்பை பேச்சுவார்த்தை நடத்த தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருப்பதும், இனிமேல் அணு சோதனைகளை நிறுத்துவது பற்றி தெரிவித்திருப்பதும் கிம் ஜாங்-உன்னின் சிறந்ததொரு ராஜீய நடவடிக்கையாக சிலர் பார்க்கின்றனர்.

ஆனால், இங்கு ஆபத்து தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும்தான்.

இந்த நிலைமையில் இருந்து வெளியேறுகின்ற தெளிவான திட்டம் எதுவுமின்றி, இந்த ஆட்டத்தில் மூன் ஜியே-இன்னும், டிரம்பும் தங்களை தலைசிறந்த நாயகர்கள் என்று கூறிவிட முடியாது.

இருதரப்புக்கும் வெற்றி மற்றும் தோல்வி பல வரையறைகள் உள்ள போதும், ஏராளமானவை முடங்கியே உள்ளன.

ஆதாயம் யாருக்கு?

படத்தின் காப்புரிமை ED JONES/GETTY
Image caption அமைதியை விரும்பும் சோல் போராட்டக்காரர்கள்

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையின் தலைவராக அவருடைய ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறார்.

அணு ஆயுதங்களை விட்டுவிடுவது பற்றி குறைந்தபட்சம் பேசுவதற்கு கிம் ஜாங்-உனை திறமையாக இணங்க வைத்திருப்பதால் மூன் ஜியே-இன் பற்றிய இந்தப் பார்வை ஆதரவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வட கொரிய தலைவர் பேசியபோது, கிடைத்த வாய்ப்பை சரியாக இனம் கண்டவர் இவர் ஒருவர்தான்.

வட கொரியாவின் இந்தப் புத்தாண்டு செய்திதான், தென் கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கின்ற நாடு என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றை வழங்கியது.

இதனை மூன் ஜியே-இன் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வட கொரியா தொடர்ந்து தனது அணு ஏவுகணை திட்டங்களை மேம்படுத்திவருகிறது

"வட கொரியாவின் அழகான தாக்குதல் என்று இதனை மக்கள் அழைக்கின்றபோது, உண்மையிலேயே இது தென் கொரியாவின் அழகான தாக்குதல் என நினைக்கிறேன். தென் கொரிய அதிபர் மூன் ஜியே-மூன் விரும்பியது இதுதான்" என்று இந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றி அறிவிக்கப்படும் முன்னரே யோன்செய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜான் டெலுரி தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய தூதர்கள் வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் பயணம் மேற்கொண்டபோது "அணு ஆயுத குறைப்பு" என்ற சொல்லை அந்நாட்டு தலைவர் கிம் ஜாங்-உன்னிடம் இருந்து பெற வேண்டும் என்பது மூன் ஜியே-இன்னுக்கு தெரிந்திருந்தது.

வட கொரிய தலைவரோடு, புன்முறுவல் பூக்கும் தென் கொரிய உயர்மட்ட தலைவர்கள் இருவரும் அமெரிக்காவுக்கும், ஜப்பானிக்கும் மகிழ்ச்சியை அளிக்காது என்றும் மூன் ஜியே-இன்னுக்கு தெரியும்.

ஆனால், இந்த ஆபத்தான முயற்சியை எடுப்பது அதிக மதிப்புக்குரியது.

இந்த சந்திப்பு இல்லாமல் கம்யூனிஸ்ட் நாடான வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா கருத்தில் கொண்டிருக்காது.

மூன் ஜியே-இன் தெரிவு செய்திருந்த தூதர்கள் அவர்களுக்கு தேவையானதை பெற்றுவிட்டனர்.

நேர்மையானதொரு மத்தியஸ்தர்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பையும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னையும் ஒரே நேரத்தில் கையாள்வதில், நேர்மையானதொரு மத்தியஸ்தராகவும் இருக்க தென் கொரிய அதிபர் முயல்கிறார்.

சொற்களை மிகவும் கவனமாக தெரிவு செய்து அவர் பயன்படுத்துகிறார்.

கவனத்தைத் திருப்பும் நபர்களைப் புகழ்ந்து கொண்டே அவர் நகர்த்த வேண்டிய முன்னெடுப்பை தன்னுடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக வைத்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கொரியாக்களுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு அதிபர் டிரம்ப்தான் காரணம் என்று தென் கொரிய அதிபர் தெரிவித்தார்.

இது அதிபர் டிரம்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

அமெரிக்காவின் குடியரசு கட்சி நிர்வாகம் மீண்டும் உறுதி செய்யக்கூடிய வகையிலான மொழியை டூன் ஜியே-இன் இதற்கு பயன்படுத்துகிறார்.

பேச்சுவார்த்தைகளை அறிவிக்கும் தென் கொரிய அறிக்கையின் மொழி இந்த நிலைமையை டிரம்ப் கையாளுவதை பாராட்டியிருப்பது இதுவரையான தருணத்திற்கு வழிநடத்தியுள்ளது.

தடைகள் அப்படியே தொடரும் என்று முன்னதாக மூன் ஜியே-இன் தெரிவித்திருக்கிறார். இப்போது டிரம்ப் இதனை உறுதி செய்துள்ளார்.

வட கொரியாவால் பயன்படுத்தப்படுவது?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், எப்போதும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ஆறு மாதங்களுக்கு முன்னர்தான், வட கொரியா அமெரிக்காவை அச்சுறுத்த தைரியம் கொள்ளுமானால், இதுவரை எந்தவொரு நாடும் சந்திக்காத தடைகளை மழையை போன்று வட கொரியா மீது பொழியப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இத்தகைய அச்சுறுத்தல் இதுவரை தெரிவிக்கப்படாதது என்று செஜாங் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் ஹக்சூன் பைய்க் தெரிவித்திருக்கிறார்.

வட கொரியாவில் இருந்து அணு ஆயுதங்கள் நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடக்கம் முதல் கூறி வருகிறது.

இது தொடர்பான எல்லா ஆச்சரியங்களுக்கு மத்தியிலும், டிரம்ப் வைத்திருக்கும் தெரிவுகளுக்கு கிம் ஜாங்-உன் ஒப்புக்கொள்வார் என்று யாரும் நம்பவில்லை.

எனவே, மூன் ஜியே-இன் மற்றும் டிரம்ப் இருவரும் இதற்கு முன்னால் உலகையே முட்டாளாக்கியுள்ள வட கொரியாவால் அதனுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.

வெளிநாட்டு உறவில் மிகவும் தைரியமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எடுத்தவராக அதிபர் டிரம்ப் இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சூதாட்டம் சரியாக வேலை செய்யுமானால், வட கொரியாவை வழிக்கு கொண்டு வந்தவராக அதிபர் டிரம்ப் கருதப்படுவார்.

அதிகமான அழுத்தங்கள், சீனாவை தன்னுடைய பக்கம் வேலை செய்ய வைத்தது மற்றும் பொருளாதார ரீதியில் வட கொரியாவை கஷ்டப்படுத்துவது நன்றாகவே வேலை செய்கிறது என்று டிரம்ப் நம்புகிறார்.

ஆனால், அதிபர் டிரம்ப் வட கொரிய தலைவரை சந்திப்பது, கம்யூனிஸ்ட் நாட்டு தலைவர் ஒருவரை சமமானவராக நடத்துவதை குறிக்கின்ற ஆபத்தும் உள்ளது. இது அமெரிக்காவின் பொது உறவில் ஏற்படும் பேரழிவாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்னர், "சிறிய ராக்கெட் மனிதர்" என்று டிரம்ப் கேலி செய்தவரோடு மிக குறுகிய காலத்தில் ராஜீய நோக்கங்களை சாதிப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

வட கொரியா இந்த அரசியல் விளையாட்டை பல தசாப்தங்களாக விளையாடி வருகிறது. அதிபர் டிரம்ப் இதற்கு புதியவர்.

இந்த ஆட்டத்தில் சிறந்ததொரு வெற்றியை டிரம்ப் எதிர்பார்க்கலாம். ஆனால், டிரம்ப் மேற்கொள்ளும் வழிமுறை கிம் ஜாங்-உன்னை சமாளிக்கும் செயல்முறையாக இருக்க முடியாது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தென் கொரியாவிற்காக சண்டையிடவுள்ள வட கொரியர்!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :