செளதிக்கு பிரிட்டன் போர் விமானங்கள் விற்பனை: ஒப்பந்தம் தயார்

48 டைஃபூன் படத்தின் காப்புரிமை Getty Images

சௌதி அரேபியாவுக்கு 48 டைஃபூன் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக பிரிட்டனின் விமான உற்பத்தி நிறுவனமான பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.

பிரிட்டனின் பாதுகாப்புத் துறை செயலாளர் கேவின் வில்லியம்சன்னை, செளதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

எங்கள் மதிப்பு மிக்க கூட்டாளியுடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.

65 பில்லியன் பவுண்டு மதிப்பிலான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்கு செளதி இளவரசரின் பிரிட்டன் பயணத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என பிரிட்டன் தரப்பு கூறியுள்ளது.

டைஃபூன் போர் விமானங்களுக்கான தேவைக் குறைந்ததால், 2,000 பேரின் வேலைகளைக் குறைப்பதாக பிஏஈ சிஸ்டம்ஸ் அறிவித்த பிறகு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

இந்த அறிவிப்பு, பிரிட்டனின் விமான உற்பத்தித் துறைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. அதே நேரம், இது மனித உரிமைக்கான மற்றும் போருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு அடியாக அமைந்துள்ளது.

செளதி அரேபியாவின் மோசமான மனித உரிமை நடவடிக்கையால், அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்க இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏமனில் நடக்கும் சண்டையில் அதிகளவு பொது மக்கள் இறப்பதற்கு செளதியின் விமானத் தாக்குதலே காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த பிரிட்டனின் கவலைகளை, செளதி இளவரசர் உடனான இரவு விருந்தின் போது, பிரிட்டன் பிரதமர் தெரிசா மே எழுப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாவதற்கு முன்பே பிஏஈ சிஸ்டம்ஸின் பங்கு 2% உயர்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: