அமெரிக்கா: வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப் புதிய வெளியுறவுச் செயலர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எக்ஸான்மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான டில்லர்சன் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்.

கினா ஹாஸ்பல்-ஐ சி.ஐ.ஏவின் முதல் பெண் இயக்குநராகவும் டிரம்ப் நியமித்துள்ளார்.

பதவி நீக்கம் தொடர்பாக முன்கூட்டியே டில்லர்சனிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் வடகொரியாவுடனான உறவுகள் வெகுவாக முன்னேறி வருவதால் அவர் பதவியில் நீடிக்கவே விரும்பினார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

வடகொரிய விவகாரம் உள்பட பல விடயங்களில் டிரம்ப் உடன் பொது வெளியில் அவர் கருத்து முரண்பட்டுள்ளார்.

என்ன காரணம் சொல்கிறார் டிரம்ப்?

"எல்லாம் நன்றாகவே போனாலும், சில விடயங்களில் முரண்பட்டோம். இரான் உடனான ஒப்பந்தம் மோசமானது என நான் நினைத்தேன். ஆனால், அவர் அதை சரியென்று நினைத்தார்," என்று கூறியுள்ளார் டிரம்ப்.

"ரெக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்," என்கிறார் அவர்.

வடகொரியா உள்ளிட்ட காரணங்களால் ரெக்ஸ் டில்லர்சன் பதவியில் நீடிக்கவே விரும்பினார் என்று கூறிய இணைச் செயலர் ஸ்டீவ் கோல்டுஸ்டெயினும் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஜான் கெல்லி கடந்த வெள்ளியன்று டில்லர்சனை அழைத்து அவரைப்பற்றி வெளியாகவுள்ள அதிபரின் ட்விட்டர் பதிவுக்கு தயாராக இருக்குமாறு கூறியுள்ளார் என்றும் அந்தப் பதிவு எதை பற்றியது என்று கூறப்படவில்லை என்றும் அசோசியேடட் பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்