கொலை முயற்சி தாக்குதல்: உயிர் தப்பிய பாலத்தீன பிரதமர்

  • 13 மார்ச் 2018

பாலத்தீனின் காசா பகுதியில் நுழைந்த, பாலத்தீன பிரதமர் ரமி ஹம்தல்லாவின் வாகன அணிவகுப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தாக்குதலுக்கு பிறகும் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஹம்தல்லா (வலது) கலந்துகொண்டார்

இந்த சம்பவத்தில் வாகனங்கள் சேதமடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு காசா பகுதியை கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பே காரணம் என்று கூறியுள்ள பாலத்தீன அதிபர் முஹமத் அப்பாஸ் இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலை நடத்தியதற்காக ஹமாஸ் மீது நேரடி குற்றச்சாட்டு எதுவும் கூறப்படவில்லை.

வாகன அணிவகுப்பின் ஒரு அங்கமாக இருந்த கார் ஒன்றின் மீது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரால் எறி குண்டுகள் வீசப்பட்டதாக, திங்கள் காலை நடைபெற்ற இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2007இல் அப்பாஸின் ஃபடா மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பாலத்தீனின் இரு பகுதிகளான காசா மற்றும் மேற்கு கரை ஆகிய பகுதிகள் தனித் தனியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அப்புறப்படுத்தப்படும் தாக்குதலில் சேதமடைந்த வாகனம்

காசாவிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 2006இல் வெற்றி பெற்ற ஹமாஸ், ஃபடா அமைப்பை வெளியேற்றிவிட்டு அங்கு ஆட்சி செய்து வருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் ஒரு கீழான குற்றம் என்று கூறியுள்ள ஹமாஸ் இது குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைக் களைவதற்காக எகிப்து நாட்டின் பாதுகாப்பு துறையின் குழு ஒன்றையும் சந்திக்க அப்பாஸ் திட்டமிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: