#கள தகவல்: ''அண்ணா, தீ துரத்திட்டு வருது.. காப்பாத்துங்க''- குரங்கணி சோகம்

குரங்கணி

"அண்ணா, தீ துரத்திட்டு வருது. எங்கள காப்பாத்தி கூட்டிட்டு போங்கனு அந்தக் குழந்தைங்க பயத்துல அலறித் துடித்தது. இடைவிடாமல் மலைப்பகுதியில் புகைமூட்டம் தெரிந்ததும், நாங்கள் அதிர்ச்சியுடன் ஓடிச்சென்றோம்" என்று பேசினார் மலைப்பகுதியில் குடியிருக்கும் முருகன்.

குரங்கணி என்ற வார்த்தையைக் கேட்டாலே குலை நடுங்கும் அளவுக்கு ஒரு சில மணி நேரங்களில் அந்த உக்கிரத் தீயீன் ருத்ர தாண்டவம் நடந்து முடிந்துவிட்டது.

தேனி மாவட்டத்தில், கேரள எல்லையில் உள்ள குரங்கணி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. மூன்று சிறுமிகள் உள்பட 26 பெண்களும், ஒரு சில ஆண்களும் மலையேற்றப் பயிற்சி முடித்து கீழே இறங்கும்போதுதான் காட்டுத் தீயீன் கடுமையான வலையில் மாட்டிக் கொண்டார்கள்.

பெண்களே அதிகம் இருந்த அந்தக் குழுவினர் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினார்கள். ஆனால், தீயின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வந்தது. காய்ந்த செடிகள், சருகுகள் தீயின் வேகத்துக்குத் தீணி போட்டன.

ஆனாலும், தீயின் நாக்குகளில் சிக்கிய சிலர், தங்களுக்குத் தெரிந்த தற்காப்பு முறைகளைப் பயன்படுத்தினார்கள். உடலில் தீப் பற்றியதும், அந்த மலைப்பகுதியிலேயே, தரையில் படுத்து உருண்ட சிலர் மேலும் காயமடைந்தார்கள். தீக் காயத்துடன், அந்தக் காயமும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

திங்கட்கிழமை பகல் நேரம் நாம் அங்கு சென்று பார்த்தபோது, பாறைகளுக்கு நடுவே தீ இன்னும் தகித்துக் கொண்டிருந்தது. அது ஏற்படுத்திய தாக்கம் பலமடங்கு அதிகமாக இருந்தது.

''இடைவிடாமல் மலைப்பகுதியில் புகைமூட்டம் தெரிந்ததும், நாங்கள் அதிர்ச்சியுடன் ஓடிச்சென்றோம்.சுமார் ஜம்பத்துக்கும் மேற்பட்டவர்கள் மலைக்கு விரைந்தோம். அந்த குழந்தைகள் எங்களிடம் கண்ணீருடன், அண்ணா தீ துரத்தீட்டு வருது. எங்கள கூட்டிட்டு போங்கனு அழுதாங்க. பயத்தில் வெளிறிப்போய் இருந்தாங்க. முதலில் அந்த குழந்தைகளை கீழே உள்ள ஆஸ்பித்திரியில சேர்த்தோம்,''என்றார் முருகன்.

''எத்தனை நபர்கள் வந்தார்கள், எந்த இடத்தில் அடிபட்டு கிடக்கிறார்கள் என எங்களுக்கு தெரியாததால், மீட்பதில் சிக்கல் இருந்தது. வெவ்வேறு பகுதிக்கு சிதறிப்போனவர்களில், ஓட முடியாதவர்கள் சிலர் பாறை இடுக்குகளில் இருந்தார்கள். மலைஏறுவதால், தங்களது பைகளை பின்புறம் மாட்டியிருந்தார்கள். ஆனால் அவர்களின் செல்போன்களில் இருந்த பேட்டரிகள், தீயீன் வெப்பத்தால் வெடித்து சிதறின. அவர்களின் பலம் குறைந்து, தீக்காயங்களால் வலி மிகுந்து, அவர்களால் உதவிகேட்க குரல் எழுப்பமுடியவில்லை. வானம் இருட்டத் தொடங்கியதால் எங்களுக்கு பயம் அதிகரித்தது,'' என முருகுமாலை என்பவர் அதிர்ச்சியோடு விவரித்தார்.

தீக்காயம் உள்ளவர்களை, கிராம மக்கள், தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள், வனப்பகுதி பயிற்சியாளர்கள் ஓடிச்சென்று தொட்டில் கட்டி தூக்கிவந்ததாக குரங்கணி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் சிபானி மற்றும் ரத்தினம் தெரிவித்தனர்.

ஒரு தனியார் மலை ஏறும் பயிற்சி மையத்தில் பதிவு செய்துகொண்டு, இரண்டு குழுவினர் மலை ஏற்றத்திற்கு வந்துள்ளனர். சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், சனிக்கிழமை இரவு மலைஏற்ற பயிற்சியை முடித்துக்கொண்டு, ஒரு தனியார் எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை ஊர்திரும்ப முடிவுசெய்திருந்தனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

''எங்கள் ஊரில் செல்போன் சிக்னல் இல்லை. நாங்கள் குரங்கணியில் இருந்து கீழே சென்று பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் போன் பேசமுடியும்,'' என தகவல் கொடுக்க முடியாத நிலையை விளக்கினார் கிராமவாசி முருகன்.

தீயணைப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மருத்துவர்கள் குழு என பலரும் விரைந்தபோது, குரங்கணி மலையில் இருள் சூழ்ந்துவிட்டது.

Image caption இடது- சால்சன் ஜோஷி,

துளி வெளிச்சமும் இல்லை. மலைக்கு சென்ற மருத்துவக்குழுவினர் மேலே தொடர்ந்து செல்ல பாதை இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு சென்றனர் என்கிறார் கேரள வனப்பகுதி பயிற்சியாளர் சால்சன் ஜோஷி.

''பயிற்சி இல்லாதவர்கள், செங்குத்தான பாதையில் கீழே விழாமல் நடந்து செல்வதே பெரிய விஷயம். மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் சென்றனர். நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, மருத்துவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்றோம். இந்த இளைஞர்கள் யாரும் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றும் தேர்ந்த பயிற்சியாளர் இல்லாமல் வந்துள்ளார்கள் என்றும் தெரிந்துவிட்டது,'' என்றார் ஜோஷி.

மன உறுதியே ஊக்கம்

தீக்காயங்களைச் சுமந்தபடி நடந்துவர தெம்பு இருந்தாலும், இலக்கியாவுக்கு தன்னம்பிகை மட்டுமே கைகொடுத்தது. அவர்தான் தனது இரண்டு தோழிகள் அருகில் பலத்த காயங்களுடன் முனக, முழுமுயற்சி செய்து நடக்கத் தொடங்கியுள்ளார். அவரைக் கண்ட மருத்துவக்குழு, முதலுதவி செய்து, தேனி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

''பலமாக காற்று வீசியது. தோழிகளை காப்பாற்ற தூளி கட்டினார்கள். மற்றவர்களைக் காப்பாற்றுங்கள், என்னால் நடக்க முடிகிறது,'' என மீட்புக் குழுவினரிடம் கூறியதாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த இலக்கியா நம்மிடம் கூறினார். அவருக்கு 31 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

'`குறைந்தபட்சம் ஒரு மலைவாசியையாவது அவர்கள் கூட்டிச்சென்றிருந்தால், ஆபத்தில் இருந்து வெளியேறுவது எப்படி என்று தெரிந்திருக்கும். இவர்களின் மரணம் எங்களுக்கு மனதில் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது,'' என வருத்தத்துடன் பேசினார் மீட்புப்பணிகளை பார்த்த கிராமவாசி ராஜா.

மலைப்பகுதிக்கும், சமவெளிக்கும் தகவல் தொடர்பை ஏற்படுத்திய, பிஎஸ்என்எல் அதிகாரிகள் நடுஇரவில் வந்து இரண்டு தொலைபேசி இணைப்புகளை நிறுவி உதவிஎண்ணை வெளியிட்டிருந்தார்கள்.

''ஒவ்வொரு துறையும் அவர்களின் வேலையைச் செய்தனர். பெற்றோர்கள் காத்திருப்பார்கள். தங்களது குழந்தைகள் பற்றிய விவரங்களை கேட்பதற்கும், குரங்கணி பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு தகவல் தொடர்பு முக்கியம் என்று எண்ணி, இந்த வேலையை செய்தோம்,'' என பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறினார்கள்.

அவர்களின் சேவையால், பலரும் ஊடகங்களுக்கு தகவல் சொல்லவும், அரசு அதிகாரிகள் தகவல் பரிமாறிக்கொள்ளவும் தொலைபேசி பயனுள்ளதாக அமைந்துவிட்டது.

கோவையில் இருந்து ஞாயிறு மாலை, மத்திய பாதுகாப்பு துறையின் விமானங்கள் வந்திருந்தாலும், வெளிச்சம் இல்லாததால், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை அனைவரையும் கண்டறியமுடியவில்லை. திங்களன்று காலையில்தான் கமாண்டோ படையினர் ஐந்து நபர்களை மீட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மதுரையில் இருந்து ஒரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக, அவர் மதுரையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

நாம் குரங்கணி மலையைக் கடந்து, இறங்கிவந்துகொண்டிருந்த வேளையில், மழைத்துளிகள் நம் வாகனத்தின் கண்ணாடியை நனைத்தன. இதே துளிகள் முந்தைய நாள் பொழிந்திருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமோ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்