''மியான்மரில் ஃபேஸ்புக் ஒரு மிருகமாக மாறியுள்ளது'': ஐ.நா

ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமை Getty Images

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதில் பேஸ்புக் ஒரு "பங்கு" வகிக்கிறது என ஐ.நாவின் விசாரணை குற்றஞ்சாட்டியுள்ளது.

மியான்மரில் இனப்படுகொலை குறித்த சாத்தியமான செயல்களை ஆராய்ந்த ஐ.நா குழு ஒன்று, ஃபேஸ்புக் ஒரு மிருகமாக மாறியுள்ளது என கூறியிருக்கிறது.

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில், ராணுவம் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியதில் இருந்து கிட்டதட்ட 7 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்குத் தப்பித்து சென்றுள்ளனர்.

பேஸ்புக் அதன் தளத்தில் "வெறுப்பு பேச்சுக்கு இடமில்லை" என்று கூறியுள்ளது.

'' இதை நாங்கள் தீவிர பிரச்சனையாக எடுத்துக்கொள்கிறோம். எதிர்பேச்சுகளுக்கு எதிராகவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் நாங்கள் பல ஆண்டுகளாக மியான்மரில் உள்ள நிபுணர்களுடன் பணியாற்றி வருகிறோம்'' என ஒரு ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

'' சமூகத்தைப் பாதுகாப்பாக வைக்க உதவும் உள்ளூர் நிபுணர்களிடம் தொடர்ந்து பணியாற்றுவோம்`'' எனவும் அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழு, மியான்மரில் தனது விசாரணையின் இடைக்கால முடிவுகளை அறிவித்துள்ளது.

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக கசப்புணர்வு பரப்பியதில் சமூக வலைதளம் முக்கிய பங்காற்றியுள்ளது என ஐ.நா குழுவின் தலைவர் மார்குகி டருஸ்மான் கூறியுள்ளார்.

மியான்மர் சூழ்நிலையை பொறுத்தவரை, சமூக வலைதளம் என்பது ஃபேஸ்புக், ஃபேஸ்புக்தான் சமூக வலைதளம்.

''தீவிர தேசியவாத பௌத்தர்கள் தங்கள் ஃபேஸ்புக் கணக்கு மூலம் ரோஹிஞ்சாக்களுக்கு எதிரான நிறைய வெறுப்பையும், வன்முறையையும் தூண்டுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்'' என்கிறார் மியான்மருக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் யாங்கீ லீ.

படத்தின் காப்புரிமை Getty Images

''ஃபேஸ்புக் இப்போது ஒரு மிருகமாக மாறியுள்ளதைப் பார்க்கும் போது பயமாக உள்ளது.`` எனவும் அவர் கூறியுள்ளார்.

இடைக்கால அறிக்கையானது, மனித உரிமை மீறலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வன்முறை சாட்சிகளின் பேட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. 600 க்கும் அதிகமானவர்களிடம் பேட்டிகள் வாங்கப்பட்டது. இது வங்கதேசம், மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடத்தப்பட்டது.

கூடுதலாக, மியான்மருக்குள் படம்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளையும் பகுப்பாய்வு செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :