ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு: பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு

  • 15 மார்ச் 2018

பிரிட்டனில், முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் பிரிட்டனிற்கு, அமெரிக்கா தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, இந்த தாக்குதலுக்கு பின்னனியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது என பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

பிரிட்டனிற்கு ஜெர்மனியும் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா மீது குற்றம் சுமத்துவதற்கு முன் மேலும் சில ஆதாரங்களை பார்க்க வேண்டும் என ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றும் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

அந்த உளவுப் பிரிவு அதிகாரிகளின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை கூறியுள்ளது.

"போரில் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட கொடூரமான ஆயுதத்தை", "அமைதியான பிரிட்டன் நகரில்" ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

கொலைமுயற்சி செய்ததாக எழுந்த புகாரை ரஷ்யா மறுத்துள்ளது. தகுந்த பதில் தருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பகை உணர்வு கொண்டது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, நியாயமற்றது, குறுகிய பார்வை கொண்டது என்று லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை EPA/ Yulia Skripal/Facebook
Image caption செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்து போனதற்கு காரணம் பிரிட்டன் தலைவர்கள் என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

பிரிட்டனை ஆதரிக்கும் நேட்டோ, செர்கெய் ஸ்கிர்பால் மீதான தாக்குதல் சர்வதேச விதிமுறைகளை மீறியிருப்பதை தெளிவாக காட்டுவதாக கூறுகிறது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக பிரிட்டன் கூறும் நோவிசோக் (novichok) நச்சு வேதிப்பொருள் பற்றி அனைத்தையும் ரஷ்யா வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. எனினும், தாங்கள் அந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்திருந்தது.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்