’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ : தினகரனின் புதிய அமைப்பு

  • 15 மார்ச் 2018

மதுரை மேலூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என தனது அமைப்பின் பெயரை அறிவித்துள்ளார் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன்.

இபிஎஸ்-ஓபிஎஸ் அணியிடம் இருந்து கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வரை தன்னுடைய அமைப்பு, குக்கர் சின்னத்தில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் என்றும் தனது அமைப்பின் அறிமுகவிழாவில் பேசிய டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

இந்த பொதுக் கூட்டத்தில் தனது அமைப்பின் கொடியையையும் டிடிவி தினகரன் வெளியிட்டார்; அதில் அதிமுக கொடியில் உள்ள கருப்பு, வெள்ளை, சிகப்பு,வண்ணங்களுடன், மத்தியில் ஜெயலலிதா படம் அமைக்கப்பட்டுள்ளது.

''கடந்த நான்கு மாதங்களாக நமது உறுப்பினர்கள் பெயர் இல்லாமல் செயல்பட்டனர். எந்த நிகழ்ச்சிகளையும் நாம் ஏற்பாடு செய்யமுடியவில்லை. நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வாங்கும்போது, அமைப்பின் பெயர் அவசியம் என்பதாலும், துரோகிகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றவேண்டும் என்பதாலும் புதிய பெயருடன் நாம் செயல்படுவோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரவும் தனது அமைப்பு உழைக்கும் என்றும் கூறினார்.

கட்சியின் கொடியை வடிவமைத்தவர் அமைப்பின் தஞ்சாவூர் மாவட்டத்தின் 39வது வட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணி என்று கூறிய டிடிவி தினகரன், ''அதிமுகவை மீட்டு, தமிழக மக்களுக்கு பணியாற்ற செயல்படவுள்ள கழகத்தின் கொடியை ஒரு சாதாரண வட்டச் செயலாளர் வடிவமைத்துள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்,'' என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறியப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்