ஒரு நாள் நீ அதிபராவாய் உனக்கு நான் வாக்களிப்பேன்...2037ஆம் ஆண்டு பெண்களுக்கான கடிதம்

2037இல் வாழப்போகும் மகளிருக்கு இன்றைய மகளிரின் திறந்தமடல் படத்தின் காப்புரிமை TO FUTURE WOMEN

"பெண்கள், ஆண்களுக்கு நிகரான மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் அளிக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்"

"ஒரு நாள், நான் அமெரிக்காவின் அதிபராவேன். அந்த இடத்தை அடையும் முதல் பெண்ணாக நான் இருந்தாலும் பரவாயில்லை"

இந்த வார்த்தைகள், ஒரு 9 வயது குழந்தையின் கடிதத்திலிருந்து வந்துள்ளன. உலகளவில் 2037ஆம் ஆண்டில் வாழப்போகும் பெண்களுக்கு இந்த காலத்து பெண்கள் எழுதிய கடிதங்களில் இதுவும் ஒன்று.

’ஃபியூச்சர் உமன்’ என்றக்குழு, அடுத்த தலைமுறை பெண்கள்மீது நீங்கள் தரும் நம்பிக்கை என்ன என்று சமகால பெண்களிடம் கேட்டது.

வாஷிங்டனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜார்ஜியா சாக்ஸல்பை என்ற கலைஞர் இந்த கடிதங்களை தொகுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பைத் தொடர்ந்து, உலகளவில் பெண்கள் நடத்திய மிகப்பெரிய பேரணி நடந்த ஒரு வருடத்திற்கு பிறகு இந்த திட்டம் தொடங்கப்ப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை To future women

"நான் ஏன் கடிதங்களாக எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால், இவ்வாறு எழுதுவது ஒரு விஷயத்துக்கான பிரதிபலிப்பை உடனடியாக ஏற்படுத்துகிறது" என்கிறார் ஜார்ஜியா சாக்ஸல்பை.

"இதற்காக நேரம் ஒதுக்கி உட்கார்ந்து, வார்த்தைகளை சரியாக தேர்வு செய்து எழுதுவது என்பதே சிறப்பு. ஆனால், இவை ஒரு மின்திரை முன்பு நடப்பவையல்ல`

"கடிதம் எழுதுதல் என்பது, ஒரு மாற்று வரலாற்றை கூறுவதற்கான பாரம்பரியமாக உள்ளது. மேலும் உலகளவில் பலர் இதில் பங்கேற்க இது வாய்ப்பளிக்கிறது" என்கிறர் ஜார்ஜியா சாக்ஸல்பை.

(ERK) என்ற பெயரில் கையெழுத்திட்டுள்ள அந்த ஒன்பது வயது சிறுமியின் கடித்திற்கான பதிலில், அந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி தாத்தாவும், எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

"இன்று நாம் பெண்களுக்கு நடக்கும் அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் குறித்து பேசுகிறோம்" என்று தொடங்குகிறார் அந்த சிறுமியின் தாத்தா.

"இந்த கடிதம் எழுதப்பட்ட 20 வருடங்களில், இந்த தைரியமான பெண்களின் குரல்கள் இம்மாதிரியான அநீதிகளை வெளிப்படுத்தி ஒரு உண்மையான மாற்றத்தை கொண்டு வரும் என நான் நம்புகிறேன்."

"இந்த முக்கியமான இயக்கத்தின் ஒரு பங்காக நீ இருப்பாய் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்கிறார் அச்சிறுமியின் தாத்தா.

"எப்போதும், ஆண்களுக்கு சாதகமாகவும், பெண்களை நசுக்கும் விதமாகவும் உள்ள கட்டமைப்பில் உன்னிடம் உள்ள நல்ல திறன்களின் மூலம் நீ வெற்றியடைவாய் என்று நான் நம்புகிறேன். உன்னால் எதையும் செய்ய முடியும் என்பதில் உனக்கு ஐயம் ஏற்படாது என நான் நம்புகிறேன்." என அச்சிறுமியின் பாட்டி எழுதுகிறார்.

படத்தின் காப்புரிமை JOE GIBSON
Image caption ஜார்ஜியா

"ஒருநாள் நீ அதிபர் ஆவாய். உனக்கு நான் வாக்களிப்பேன் என நம்புகிறேன்."

எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் ஜுலை மாதம் வரை காட்சிக்கு வைக்கப்படும், இந்த அனைத்து கடிதங்களும் பாதுகாக்கப்பட்டு 2037இல் மீண்டும் அதனை காட்சிப்படுத்தவுள்ளார் ஜார்ஜியா.

இந்த கடிதங்களை மொழிபெயர்க்க, அமெரிக்காவில் உள்ள பல்வேறு தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஜார்ஜியா. இந்த ஆண்டின் மகளிர் தினத்தை முன்னெடுக்கும் வகையிலும், உலகளவில் பலரையும் இந்த கடிதம் எழுதும் முயற்சியில் ஈடுபடச்செய்யவும் அவர் ஊக்கமளிக்கிறார்.

சமீபத்தில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்த பெண்களின் எண்ணிக்கை என்பது, இத்தகைய பெண்களின் போராட்ட நிகழ்வுகளை கவனிக்காமல் ஒதுக்கிவிட முடியாது என்று தன்னை உணர வைத்ததாக அவர் கூறுகிறார்.

"பிறகு #MeToo நிகழ்வு, அது சிறிய விஷயமல்ல. இதற்கு பல அமைப்புகள் பதிலளித்தன" என்கிறார் ஜார்ஜியா.

"அதனால், ஒரு அருங்காட்சியகத்தில் செய்யப்படுவது போல, முறையே இந்த கடிதங்களை ஆவணப்படுத்தும் முடிவிற்கு வந்தேன். இவை, தனிப்பட்ட மனிதர்களின் கடிதங்களாக இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய விஷயமாகும்."

படத்தின் காப்புரிமை To future women

"கடந்த நூற்றாண்டில், பெண் உரிமையை பொறுத்தவரையில் பல கடுமையான பாதைகளை நாம் கடந்துள்ளோம். இருந்தபோதும் அவற்றை நாமும் மறக்கிறோம், வரலாறும் மறந்துவிடுகிறது"

இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிலாந்தில், வாக்கு உரிமைக்காக பெண்கள் ஒரு சங்கத்தை அமைத்து போராடிய சஃப்ஃபிரகேட் நிகழ்வு(suffragette movement) எடுத்துரைக்கிறார் ஜார்ஜியா.

`தற்போது, என் மூளையில், இந்த நிகழ்வு குறித்து நான் தகவல்களை சேர்க்க வேண்டும். அதாவது, யார் இந்த போராட்டத்தில் முக்கிய போராட்டக்காரர்கள், எவ்வாறு நடந்தது, காரணம் என்ன என்றெல்லாம் எனக்கு தெரியாது`

"எனக்கு யாரும் அதை கற்றுத்தரவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, என் காலத்தையும் தாண்டி வாழவுள்ள அருங்காட்சியகங்கள் இந்த உரையாடல்களை திரும்பிப்பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்."

படத்தின் காப்புரிமை JOE GIBSON

ஜார்ஜியா இன்னும் தனது கடிதத்தை எழுதவில்லை. இந்த ஆவணப்படுத்துதல் பணியின் முடிவில் அவர் கடிதம் எழுதவுள்ளார்.

"பல மகள்களும், அவர்களின் தாய்மார்களும் ஒன்றிணைந்து, இருதலைமுறைகளின் கலவையாக கடிதங்களை எழுதிய காட்சிகள் மிகவும் அழகானவை" என்கிறார் ஜார்ஜியா.

பல கடிதங்களிலும் பார்க்க முடிந்த ஒரு தலைப்பு என்பது, `தலைமைப்பொறுப்புகளில் பெண்கள்` என்பதே.

அந்த ஒன்பது வயது சிறுமையை போலவே, கடிதம் எழுதிய ஒரு 26 வயது பெண்மணியும், வருங்காலத்தில் பெண் அதிபர் வரக்கூடுமா என்பதை அறியவே ஆவலாக உள்ளார்.

"அது ஓப்ரா வின்ஃபிரியா?" என்று அவர் கேட்கிறார்.

தான் ஒரு `பெண்ணியவாதி` என்பதை கடந்த ஆண்டுதான் அந்த பெண்மணி உணர்ந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை JOE GIBSON

"பெண்ணியம் என்பது எப்போதுமே ஒரு பெரிய வார்த்தை போலவே தோன்றியது. ஆனால் தற்போது, நான் அதை புரிந்துகொள்கிறேன்… அந்த வார்த்தை என்பது, எனக்கும் என்னை போன்ற லட்சக்கணக்கான சகோதரிகளுக்குமான வார்த்தையாக உள்ளது.`

டைம் கேப்சூல் என்பவை பொதுவாகவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருக்கும். ஆனால், 20 ஆண்டுகள் என்ற கால இடைவேளையை முடிவு செய்ததற்கு ஜார்ஜியா ஒரு காரணம் வைத்துள்ளார்.

"பல பெரிய மாற்றங்கள் நடப்பதற்கு இது போதுமான நேரமாக அமையும்" என்கிறார் அவர்.

"தற்போது நாம் விதைக்கும் விதையில் வளரும் பழங்களை பின் வரும் அவர்கள் ருசிக்க உள்ளார்கள்."

செய்தியாளர்கள்: அமிலியா பட்டர்ஃபிளை மற்றும் ஜார்ஜின பியர்ஸ்.

இதர செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :