நீங்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஹீரோவா? பிபிசி தமிழின் புது அறிவிப்பு #BBCTamilStreetCricket

இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நண்பர்களோடு இணைந்து மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. வீடியோ கேம், ஸ்மார்ட்போன் கேம் என விளையாடுவதற்கு வெவ்வேறு விஷயங்கள் வந்துவிட்டாலும் பலர் தெருக்களிலும் ஒழுங்கமைவான அல்லது ஒழுங்கற்ற திறந்த வெளி மைதானங்களிலும் ஆற்றோரங்களிலும் மொட்டை மாடிகளிலும் இன்னமும் கிரிக்கெட் விளையாடிவருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை சம்சுல்
Image caption புகைப்படம் - சம்சுல்

ஒரு குச்சி, ஒரு கல், சில செங்கல், ஒரு சுவர், ஓர் தென்னை மட்டை என கிடைக்கும் பொருட்களை வைத்து எளிமையாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் இன்னமும் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள். ஸ்ட்ரீட் கிரிக்கெட் என்பது ஓர் அடையாளமாகி வரும் நிலையில் தமிழகத்தில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு பிபிசி தமிழ் ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

உங்களில் யார் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஹீரோ?

வரும் நாட்களில் பிபிசி தமிழ் ஒரு ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளது. பிபிசி தமிழின் பிரத்யேக ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளின் படி இந்த தொடர் நடக்கவுள்ளது.

அடுத்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (24/03/18 மற்றும் 25/03/18) தேதிகளில் சென்னை, ஈரோடு, திருச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் லீக் தொடர் நடக்கவுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், சென்னை ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும். இந்த பகுதிகளில் இருப்பவர்கள் சென்னையில் நடைபெறும் லீக் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்கள் திருச்சி மண்டலத்தில் நடைபெறும் லீக் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை வள்ளி சௌத்திரி
Image caption புகைப்படம் - வள்ளி சௌத்திரி

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மண்டலத்தின் கீழ் நடைபெறும் லீக் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள லீக் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

தெரு கிரிக்கெட்: பிபிசி-தமிழ் நேயர்களின் உற்சாகப் புகைப்படங்கள்

எப்படி கலந்து கொள்வது?

ஓர் அணியில் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி. உங்கள் அணியில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர், வயது, முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் 14 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் அணியில் இருக்கலாம். 18 வயதுக்குட்பட்ட நபர்கள் எனில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தையும் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

எந்த ஊரைச் சேர்ந்தவர்? எந்த மண்டலத்தில் நடைபெறும் லீக் சுற்றில் கலந்துகொள்ள உள்ளீர்கள் என்ற விபரத்தை தெளிவாக குறிப்பிடவும்.

உங்கள் அணிக்கு நீங்கள் வைக்கும் பெயர் என்ன? ஸ்ட்ரீட் கிரிக்கெட் குறித்த உங்கள் பார்வை என்ன? பிபிசி தமிழ் வழங்கும் சேவைகளை பற்றிய உங்களின் புரிதல் என்ன என்பனவற்றை சுருக்கமாக மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என எவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். உரிய தகவல்களை மின்னஞ்சலில் தெரிவிக்காவிடில் அவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் மூன்று அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு லீக் சுற்றில் அனுமதிக்கப்படும். வெற்றி பெறும் அணி அடுத்த சில நாட்களில் சென்னையில் நடக்கவுள்ள அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும்.

போட்டி நடக்கும் அன்று உங்கள் அணியினர் கொண்டு வரும் மட்டையை பயன்படுத்த மட்டுமே அனுமதியளிக்கப்டும். அனைத்து போட்டிகளிலும் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படும். ஸ்ட்ரீட் கிரிக்கெட் என்பது சுவாரஸ்யமான விதிகளை கொண்ட விளையாட்டு. பிபிசி தமிழின் சுவாரஸ்யமான விதிகள் பின்னர் பிபிசி தமிழின் இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விதிகளின் அடிப்படையில்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.

மின்னஞ்சல் வந்து சேர வேண்டிய கடைசி தேதி மற்றும் நேரம் - 19 மார்ச் 2018, திங்கள் கிழமை காலை 9 மணி .

படத்தின் காப்புரிமை சதீஷ் குமார்
Image caption புகைப்படம் - சதீஷ் குமார்

லீக் சுற்றில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பிபிசி தமிழ் மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக அலைபேசி மூலமாக தொடர்பு கொள்வார்கள்.

எங்களிடம் இருந்து எந்த மின்னஞ்சலும் கிடைக்கப்பெறாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெல்பவர்களுக்கு பிபிசி தமிழ் சார்பில் கோப்பை வழங்கப்படவுள்ளது. ரொக்கப் பரிசுகள் பிபிசி தரப்பில் இருந்து வழங்கப்படமாட்டாது. இறுதிப் போட்டி பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இந்த வருடத்தின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஹீரோ யார் என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் விடை தெரியும் .

நேயர்கள் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி - bbctamizhosai@gmail.com

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்