எஃப்.பி.ஐ துணை இயக்குநரை பணிநீக்கம் செய்த டிரம்ப்

  • 17 மார்ச் 2018

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரிகளை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது எஃப்.பி.ஐ துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக்காப், வெள்ளிக்கிழமையன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP/Getty
Image caption எஃப்.பி.ஐயில் அதிக ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் ஆண்ட்ரூ மெக்காப்

எஃப்.பி.ஐ மற்றும் தனக்கு எதிராக டிரம்ப் நிர்வாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக ஆண்ட்ரூ மெக்காப் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரூ மெக்காப் பணிநீக்கம் செய்யப்பட்ட நாள் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கும், ஜனநாயகத்திற்கும் முக்கியமான நாள் என்று அமெரிக்க அதிபர் தனது டிவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல்கள் மற்றும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு பற்றிய எஃப்.பி.ஐ விசாரணையில் டிரம்ப் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டிய ஆண்ட்ரூ மெக்காப், டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்க அதிபர் தம்மை பணிநீக்கம் செய்திருப்பது எஃப்.பி.ஐக்கு எதிரான டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் "போரின் ஒரு பகுதி" என ஆண்ட்ரூ மெக்காப் கூறுகிறார்.

மெக்காப் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

நீதித்துறைக்கு தலைமை தாங்கும் ஜெஃப் செசென்ஸ், "ஒரு விரிவான மற்றும் நியாயமான விசாரணையின் பின்னர்" மெக்காப் மீதான விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

உள் விசாரணை அறிக்கையில், மெக்காப் "முறையற்ற வகையில் செய்தி ஊடகங்களிடம் தகவலை வெளிப்படுத்தியது" உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜெஃப் செசென்ஸ்

வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் பிற்பகுதியில் செஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: "இன்ஸ்பெக்டர் ஜெனரல் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலும், தொழில்முறை பொறுப்பு மற்றும் எஃப்.பி.ஐ மூத்த தொழில் அதிகாரியின் பரிந்துரையின்படியும் ஆண்ட்ரூ உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகிறார்."

எஃப்.பி.ஐ துணை இயக்குனர் ஆண்ட்ரூ மெக்காப், தன் மீதான விசாரணைக்காக ஜனவரி மாதம் விடுப்பில் சென்றார். நிர்வாகத்தின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவிற்குள் தள்ளப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை மறுத்தது.

விடுப்பில் இருந்த அவர், ஓய்வுபெறும் பட்டியலில் இருந்தார்.

ஆண்ட்ரூ மெக்காப் பதவியில் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதிய பலன்கள் அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் பணியில் இருந்து நிர்வாகத்தால் நீக்கப்பட்டிருப்பதால், ஓய்வூதியம் தொடர்பான உரிமைகளை அவர் இழக்க நேரிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: