தேர்தலில் ரஷ்யாவின் தொடர்பு குறித்த விசாரணை 'ஒருதலைபட்சமானது': டிரம்ப்

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணை குழுவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் பகிர்ந்துள்ள ஒரு ட்வீட்டில், இது நேர்மையற்ற விசாரணை என்று கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சித்து இருக்கிறார்.

விசாரணைக் குழு கடுமையான ஜனநாயகவாதிகளாலும், ஹிலேரி கிளிண்டனின் ஆதரவாளர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறி உள்ளார்.

எஃப்.பி.ஐ -ன் முன்னாள் தலைவரும், இப்போது இந்த விசாரணையை மேற்கொண்டு வருபவருமான ராபர்ட் முல்லர் குடியரசு கட்சியின் ஆதரவாளர்தான்.

டொனால்ட் டிரம்ப்பின் இந்த ட்வீட்டை பல குடியரசு கட்சியினர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.

தனது முந்தைய ட்வீட்டுகளில் எஃப்.பி.ஐ - இன் முன்னாள் துணை இயக்குநரான ஆண்ட்ரூ மெக்காப்பையும், முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமியையும் இழிவுபடுத்தி இருந்தார்.

ஆண்ட்ரூ மெக்காப் ஓய்வு பெறுவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதவி நீக்கப்பட்டார்.

ஜேம்ஸ் கோமி, கடந்த ஆண்டு டிரம்ப்பால் பதவி நீக்கப்பட்டார். இந்த பதவி நீக்கம்தான் முல்லர் தலைமையிலான விசாரணை குழு அமைப்பதற்கே காரணமாக அமைந்தது.

கடுமையான விமர்சனம்

இரண்டு நாட்களுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ரூ மெக்காப், ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் மற்றும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு பற்றிய எஃப்.பி.ஐ விசாரணையில் டிரம்ப் தலையிட்டதாக குற்றஞ்சாட்டி, டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் தம்மை பணிநீக்கம் செய்திருப்பது எஃப்.பி.ஐக்கு எதிரான டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் "போரின் ஒரு பகுதி" என ஆண்ட்ரூ மெக்காப் கூறி இருந்தார்.

நீதித்துறைக்கு தலைமை தாங்கும் ஜெஃப் செசென்ஸ், "ஒரு விரிவான மற்றும் நியாயமான விசாரணைக்கு பின்னர்" மெக்காப் மீதான விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்து இருந்தார்.

உள் விசாரணை அறிக்கையில், மெக்காப் "முறையற்ற வகையில் செய்தி ஊடகங்களிடம் தகவலை வெளிப்படுத்தியது" உறுதி செய்யப்பட்டது என்றும் கூறி இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: